1,000 உழவர் நல சேவை மையங்கள் ரூ.42 கோடி ஒதுக்கியது தமிழக அரசு
சென்னை:மாநிலத்தில், 1,000 இடங்களில், உழவர் நல சேவை மையங்கள் அமைக்க, 42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்பில், உழவர் நல சேவை மையங்கள் அமைக்க, 30 சதவீத மானியம் வழங்கப்படும். அதன்படி, 3 முதல் 6 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். இந்த மையங்களில், விவசாயிகளுக்கு தேவையான, விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை செய்யப்படும். வேளாண் உற்பத்தியை பெருக்க, பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும். நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டுதல் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். இம்மையங்கள், விவசாயிகள் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெற உதவும். வேளாண் பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள், சுய தொழில் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், 20 முதல் 40 வயதுக்கு உட்பட்ட, வேளாண் சார்ந்த பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்கள், வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். வங்கி நடைமுறைக ளை பின்பற்றி, கடன் பெற ஒப்புதல் பெறப்பட்ட பின், இத்திட்டத்தில் மானிய உதவி பெற, https://www.tnagrisnet.tn.gov.in/kaviaDP/register என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அரசாணையை வேளாண் து றை செயலர் தட்சிணாமூர்த்தி வெளியிட்டுள்ளார்.