சென்னை : தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, 2024 - 25ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, லாபம் ஈட்டிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்களுக்கு, உபரி தொகையை கணக்கில் கொண்டு, 8.33 சதவீதம் மிகை ஊதியம், 11.67 சதவீதம் கருணை தொகை என, மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். மின் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்து கழகங்கள், நுகர்பொருள் வாணிப கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுள்ள சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு, 8.33 சதவீதம் மிகை ஊதியம், 11.67 சதவீதம் கருணை தொகை சேர்த்து, 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில், சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு, 8.33 சதவீதம் குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 சதவீதம் கருணை தொகை என, மொத்தம் 10 சதவீதம் வழங்கப்படும். வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வாரியம் ஆகியவற்றில், சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு, 8.33 சதவீதம் மிகை ஊதியம், 1.67 சதவீதம் கருணை தொகை வழங்கப்படும். குடிநீர் வடிகால் வாரியத்தில், சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு, 8.33 சதவீதம் மிகை ஊதியம் வழங்கப்படும். நுகர்பொருள் வாணிப கழக தற்காலிக தொழிலாளர்களுக்கு, 3,000 ரூபாய் கருணை தொகையாக வழங்கப்படும். இதன் வாயிலாக, மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள், குறைந்தபட்சம் 8,400 ரூபாயும், அதிகபட்சம் 16,800 ரூபாயும் பெறுவர். மொத்தத்தில் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2.69 லட்சம் தொழிலாளர்களுக்கு, 376 கோடி ரூபாய் போனஸ் வழங்கப்படும். கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு உத்தரவுகள் தனியாக வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.