திருப்பரங்குன்றம் மலையில் பலியிடும் வழக்கம்; தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடும் நடைமுறை உள்ளதாக மூன்றாவது நீதிபதி விசாரணையில் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலையின் உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, அங்கிருந்து தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையிலுள்ள பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, மாடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் வெவ்வேறு நிவாரணம் கோரி சில மனுக்கள் தாக்கலாகின. நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. ஜூன் 24 ல் நீதிபதி ஜெ.நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி மாறுபட்ட உத்தரவு பிறப்பித்தார். மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர் நேற்று விசாரித்தார். நீதிபதி: சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு ஆதாரம் உள்ளதா, ஆடு, கோழி பலியிடும் நடைமுறை ஏற்கனவே இருந்ததா. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் வீரா.கதிரவன், ரவீந்திரன்: ஜாதி, மதம், உணவு அடிப்படையில் பாகுபாடு கூடாது. சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு ஆவணங்கள் உள்ளன. அங்கு ஆடு, கோழி பலியிடும் நடைமுறை ஏற்கனவே உள்ளது. அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலில் ஆடு, கோழி பலியிடப்படுகிறது. ஒருவரின் மத உரிமையில் மற்றொருவர் தலையிட முடியாது. இவ்வாறு கூறி ஆவணங்களை தாக்கல் செய்தனர். விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.