உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மிதவை கூண்டில் மீன் மற்றும் சேற்று நண்டு வளர்ப்பு: தமிழக அரசு நடவடிக்கை

மிதவை கூண்டில் மீன் மற்றும் சேற்று நண்டு வளர்ப்பு: தமிழக அரசு நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மீனவர்களுக்கு பயிற்சி அளித்து, மிதவை கூண்டு முறையில், மீன் மற்றும் சேற்று நண்டு வளர்க்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.பாக் வளைகுடா பகுதிகளான, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கடலில் கூண்டு அமைத்து மீன் வளர்த்தல், சேற்று நண்டு எனப்படும் கழிநண்டு வளர்த்தல் குறித்து, 700 மீனவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்கள் தொழில் துவங்க, தமிழக அரசு 26 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

நல்லவிலை

இது குறித்து, மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மீனவர்கள் சுய தொழில் துவங்கி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய, கடலில் கூண்டு அமைத்து, அதில் கொடுவா உள்ளிட்ட சில வகை மீன் குஞ்சுகளை வளர்த்து, விற்பனை செய்யலாம். அதேபோல, ஆறு மற்றும் கடல் சேரும் பகுதியான, சதுப்பு நிலப்பகுதிகளில், சேற்று நண்டுகள் வளர்க்கலாம். இவற்றை விற்றால், நல்ல விலை கிடைக்கும்.இத்திட்டத்தில், ஒரு பயனாளி தொழில் துவங்க, 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. பெண்கள் மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 60 சதவீதம் மானியம், பிற வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு, 40 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு மீனவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. புதிதாக கற்றுக் கொள்ள வருவோருக்கு, இரண்டு நாள் முதல் தேவைக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் தொழில் துவங்க உதவி செய்யப்படும். இந்த கூண்டுகள், கடலில் கடற்கரையோரம் அமைக்கப்படும்.

கூண்டு அமைக்கும் முறை

அதாவது, பெரிய அளவிலான மிதக்கும் குழாய்கள், இரண்டு அடுக்காக, வட்ட வடிவில் கட்டப்பட்டு, அதன்கீழ் தேவைக்கு ஏற்ப, மூழ்கும் குழாய் தொங்க விடப்படும். பக்கவாட்டில் கயிறுகள் கட்டி, மேல் இருந்து கீழ் வரை, மீன் வலையை தொங்கவிட்டு, அதை மூழ்கும் குழாயில் இணைத்து கட்ட வேண்டும். நகராமல் இருக்க கீழ் பாகத்தில் நங்கூரம் கட்டி தொங்க விட வேண்டும். இப்படி தயார் செய்து, அதில் மீன் அல்லது கழிநண்டு வளர்க்கலாம்.இதில் பயன்பெற விரும்பும் மீனவர்கள், தங்கள் பகுதியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், மீன்வள ஆய்வாளர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !