உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எலும்பு வங்கிகளின் எண்ணிக்கையை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்

எலும்பு வங்கிகளின் எண்ணிக்கையை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்

மதுரை : சென்னை, மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் எலும்பு வங்கி செயல்படுவதைப் போல பிற மாவட்ட பழமையான அரசு மருத்துவமனைகளிலும் எலும்பு வங்கியை அரசு துவக்க வேண்டும். விபத்து மற்றும் புற்றுநோயால் எலும்புகளை இழப்போருக்கு மற்றவர்களிடம் இருந்து எலும்புகள் பெறப்பட்டு பொருத்தப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் புற்றுநோயால் எலும்புகளில் அரிப்பு ஏற்பட்டு எலும்புகளை இழப்போர் அதிகம். விபத்துகளில் இடுப்பெலும்பு முறிவு ஏற்பட்டோ, வயதானவர்கள் கீழே விழும் போதோ இடுப்பெலும்பு முறிந்தாலோ அவற்றை மீண்டும் பொருத்த முடியாது. அவர்களது பந்து மூட்டு அகற்றப்பட்டு செயற்கை பந்து மூட்டு பொருத்தப்படும். அதை கிருமிநீக்கம் செய்து மற்ற நோயாளி களுக்கு பொருத்தலாம். எலும்பு வங்கிக்கான கட்டமைப்புக்கு அதிகம் செலவிட வேண்டியதில்லை. சுத்தம் செய்த, கிருமிநீக்கம் செய்த எலும்புகளை மைனஸ் 80 டிகிரி செல்சியஸில் பாதுகாப்பதற்கு இரண்டு 'ப்ரீஸர்' இயந்திரங்கள், யு.பி.எஸ்., இயந்திரம், தடையற்ற மின்வசதி, பயிற்சி பெற்ற டாக்டர், நர்ஸ்கள் இருந்தால் போதும். ஒப்புதல் தேவை ரத்தவங்கியில் இருந்து ரத்தத்தை மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்புவது போல எலும்பு வங்கியில் இருந்து எலும்புகளை மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்புவதற்கு தமிழக அரசின் அனுமதியும் ஒப்புதலும் வேண்டும். மதுரை, சென்னை அரசு மருத்துவமனை எலும்பு வங்கிகளில் மைனஸ் 80 டிகிரி செல்சியஸில் கிருமிநீக்கம் செய்த எலும்புகள் பாதுகாக்கப்பட்டாலும் அரசு அனுமதி இல்லாததால் பிற மாவட்ட நோயாளிகளுக்கு வழங்க முடியவில்லை. எனவே திருநெல்வேலி, திருச்சி, கோவை போன்ற பழமையான அரசு மருத்துவமனைகளில் எலும்பு வங்கிகளை துவக்க வேண்டும். கதிரியக்க இயந்திரம் சென்னை, மதுரையில் இருந்து பெறப்படும் எலும்புகள் பெங்களூருவில் உள்ள நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு ' 20 கிலோ கிரே' அளவுள்ள 'காமா' கதிரியக்கம் மூலம் கிருமிநீக்கம் செய்யப்பட்டு திரும்ப பெறப்படுகிறது. தமிழகத்தில் கிண்டியில் இந்த இயந்திரத்தை நிறுவ மதிப்பீடு செய்த நிலையில் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே கதிரியக்க இயந்திரம் நிறுவி, கூடுதல் எலும்பு வங்கிகளையும் துவங்கினால் நோயாளிகள் பயன் பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை