செங்கல்பட்டு: 'தமிழக எம்.பி., க்கள் 40 பேர் என்ன பண்ண போகிறார்கள் என்றுகேட்டவர்களுக்கு நேற்று பதில் கிடைத்து இருக்கிறது' என செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,285 கோடியிலான புதிய திட்ட பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் இருக்கிறது. பெண்கள் படிக்க வேண்டும். வேலைக்கு போக வேண்டும். இன்று எல்லா துறையிலும் பெண்கள் கோலோச்சும் காலத்தை பார்க்க முடிகிறது. தன்னம்பிக்கை
காவல்துறை முதல் விளையாட்டு துறை வரை பெண்கள் தூள் கிளப்புகிறார்கள். நமது ஆட்சியில் பெண்களுக்கு பொருளாதார தன்னம்பிக்கையை கொடுத்து இருக்கிறோம். மகளிருக்காக புதுமை பெண் திட்டம், மகளிர் உரிமை தொகை, இலவச பஸ் பயணம் என பல்வேறு திட்டங்களை உருவாக்கி உள்ளோம். ஒவ்வொரு குடும்பத்திற்கும், தனி நபர்களுக்கும் பார்த்துப் பார்த்து தி.மு.க., அரசு செய்து வருகிறது. திமிராக பேசுகிறார்
சில தடைகள் இல்லை என்றால் தமிழகம் இன்னும் வேகமாக வளர்ந்து இருக்கும். நேற்று பார்லிமென்டில் நடந்த நிகழ்ச்சி எல்லாம் நீங்கள் டிவியில் பார்த்து இருப்பீர்கள். மும்மொழி கொள்கையை, அதாவது ஹிந்தி, சமஸ்கிருதம் மொழியை ஏற்றுக்கொண்டால் தான் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடி நிதியை தருவோம் என்று திமிராக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகிறார்.அவங்க தேசிய கல்வி கொள்கை என்ற பெயரில், புகுத்துவது தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை மொத்தமாக அழித்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். நாம் அதை எதிர்க்கிறோம். கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்ய அத்தனை செயல்திட்டங்களும் தேசிய கல்வி கொள்கையில் இருக்கிறது. பிளாக் மெயில்
கல்வியை தனியார் மயம் ஆக்குவது, பணக்காரர்களுக்கு மட்டும் உயர்கல்வி என்ற நிலையை ஏற்படுத்துவது, கல்வியை மதவாதத்துடன் புகுத்துவது, சின்ன பிள்ளைகளுக்கு கூட பொதுத்தேர்வு என கல்வியில் மத்திய அரசின் அதிகாரத்திற்கு வழி வகுக்கிறது. இதனால் தான் தேசியக் கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று சொல்கிறோம். இதனை ஏற்றுக்கொண்டால் தான் நிதி தருவோம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிளாக் மெயில் செய்கிறார்.நாசக்கார திட்டம்
ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் இந்த நாசகார திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழகத்தை சேர்ந்தவர்கள் நாகரிகமற்றவர்கள் என பேசிய தர்மேந்திர பிரதானை வார்த்தையை திரும்ப பெற வைத்து இருக்கிற தமிழக எம்.பிக்கள். எம்.பி.க்களுக்கு வாழ்த்துகள். 40 பேர் என்ன பண்ண போகிறார்கள் என்று கேட்டவர்களுக்கு நேற்று பதில் கிடைத்து இருக்கிறது. தமிழகத்தின் உரிமைகளுக் யாருக்கும் பயப்பட மாட்டோம் என்று நிரூபித்து இருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
வன்மம்
இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் வெளியிட்ட 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
2024-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் ஷோபா: 'தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!'
2025-இல் பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்: 'தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!'
இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழர்கள் மீது பா.ஜ..வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது.
'இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழகம், இவர்கள் கொண்டு வரும் தேசியக் கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் ஏற்காது. நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழகம் தொடர்ந்து எழுப்பும்' எனச் செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன்!