பிரதமருக்கு நன்றி கூறாத முதல்வர் ஸ்டாலினை தமிழகம் மன்னிக்காது; பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை ஆவேசம்
அவனியாபுரம் : ''பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்காத முதல்வர் ஸ்டாலினை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்'' என்று பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: பிரதமர் மோடி, நல்லிணக்க துாதரைப் போல் இலங்கைக்கு சென்று தமிழ் மக்களையும் சந்தித்துஉள்ளார். அந்நாட்டு பிரதமர், 'இந்த மண், இந்தியாவுக்கு எதிராக எந்த காலத்திலும் பயன்படுத்தப்படாது' என உறுதி மொழிந்துஉள்ளார். மீனவர்களின் நலம் காப்போம் என தெரிவித்து, அவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என உறுதிமொழியையும் பெற்று இலங்கையில் நல்லுறவை பேணிய பிரதமர் தமிழகம் வந்துள்ளார். தமிழ் மக்களுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி திட்டங்களை அறிமுகம் செய்து, ஏழு மடங்கு ரயில்வே திட்டங்களை கொடுத்து தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை நிறைவேற்றும் இந்த நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றிருக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு பிரதமர் வரும்போது அம் மாநில முதல்வர் பிரதமரை வரவேற்க வேண்டும் என்பது விதி. ஆனால் பிரதமரை புறக்கணிக்க வேண்டும் என்றே முதல்வர் ஸ்டாலின் ஊட்டி சென்றுள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லாத உயர் தொழில்நுட்பத்தில் உருவான பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி திறந்துஉள்ளார். அதனை வரவேற்று நன்றி சொல்லாமல் புறக்கணித்த முதல்வரை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.