தமிழக பொருளாதார வளர்ச்சி 9.69 சதவீதமாக உயர்வு; அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு
சிவகங்கை; ''தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9.69 சதவீதமாக உயர்ந்துள்ளது,'' என, சிவகங்கையில் நடந்த மினி பஸ் திட்ட துவக்க விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.அவர் மேலும் பேசியதாவது: ரோடு, மின்சாரம், குடிநீர் வசதி செய்து தந்ததால் தமிழகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக உள்ளது. தமிழகம் தவிர்த்து வடமாநிலங்களில் இன்னும் ரோடு வசதி பூர்த்தியடையவில்லை. இந்த 4 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் ரூ.10 லட்சம் கோடி தொழில் முதலீடாக தமிழகத்திற்கு வந்துள்ளது.இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 5.65 சதவீதமாக உள்ளது. ஆனால் தேசிய சராசரியை விட தமிழக பொருளாதார வளர்ச்சி 9.69 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவை விட தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி இரு மடங்கு அதிகரித்துள்ளது.புதிய திட்டங்கள் மட்டுமின்றி, நடைமுறையில் உள்ள திட்டங்களில் சில மாற்றங்களை செய்து அரசு செயல்படுத்தி வருகிறது. போக்குவரத்துத்துறை லாப நோக்கத்துடன் மட்டுமின்றி, சேவையாகவும் இருக்க வேண்டும். தனியார் எப்போதும் லாப நோக்கத்தோடு தான் தொழில்களை செய்ய முடியும். அரசு சேவை நோக்கத்தோடு செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசு போக்குவரத்து கழகம் மூலம் 23,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதன் மூலம் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். நஷ்டத்தில் அரசு பஸ்கள் இயங்கினாலும், மக்களுக்காக இயக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுத்தி வருகிறோம். தனியாரின் ஈடுபாடுட்டுடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 1989ல் மினி பஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.