டாஸ்மாக் நிறுவனம் தவறு செய்தது நிரூபணம்; எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேட்டி
சென்னை : ''சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வழக்கை மாற்றக்கோரி, டாஸ்மாக் நிறுவனம் உச்ச நீதிமன்றம் சென்றதில் இருந்து, அந்நிறுவனம் தவறு செய்தது நிரூபணமாகி உள்ளது,'' என, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார். சட்டசபையில் வெளிநடப்பு செய்த பிறகு, அவர் அளித்த பேட்டி:டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த ஊழல் குறித்து பேச, சட்டசபையில் அனுமதி கேட்டோம்; தரவில்லை. டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் இதர அலுவலகங்களிலும், மதுபானம் சப்ளை செய்த தொழிற்சாலைகளிலும், கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து, டாஸ்மாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஊழியர்களை துன்புறுத்தியதாக மற்றொரு வழக்கு தொடர்ந்தது. மேற்கொண்டு மத்திய அமலாக்கத்துறை, டாஸ்மாக் மீது மேல்நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் வழக்கு தொடர்ந்தது.வழக்கை சந்திக்க திராணியில்லாத டாஸ்மாக் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. அமலாக்கத்துறை தொடர்புடைய வழக்குகள் அனைத்தையும், வேறொரு மாநில உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.இதை சட்டசபையில் பேச முயன்ற போது, நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது, அதுகுறித்து பேசக்கூடாது என்றனர்; அதை ஏற்கிறோம். ஆனால், அரசு நிறுவனம் உச்ச நீதிமன்றம் சென்றது குறித்து பேச அனுமதி கேட்டோம். உச்ச நீதிமன்றம் சென்றதன் வழியே, டாஸ்மாக் நிறுவனம் தவறு செய்தது நிரூபணமாகி உள்ளது. எங்கு விசாரித்தாலும், இதையே விசாரிப்பர். தமிழகத்தில் விசாரித்தால், தவறு உடனுக்குடன் வெளி வரும். அதை மறைக்க, அரசு தில்லுமுல்லு வேலைகளை செய்கிறது.நொந்து நுாடுல்சாகி போன அ.தி.மு.க., தொண்டர்கள் தான் தியாகிகள் என்று முதல்வர் கூறியுள்ளார். நான் எவ்வளவு பிரச்னைகளை சந்தித்துள்ளேன். அவரால் ஒன்றை சந்திக்க முடியுமா? பிரச்னைகளை கண்டு, நானோ, அ.தி.மு.க.,வினரோ அஞ்சியதில்லை. தி.மு.க., ஆட்சியில் தான், பொதுமக்கள், மீனவர்கள், மாணவர்கள், நொந்து நுாடுல்சாகி உள்ளனர்.முதல்வருக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக, மீனவர்களின் துன்பம் தெரியவில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளதால், சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இவை வெற்று அறிவிப்புகளாக இருக்கும்.கச்சத்தீவை கொடுத்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க., தான். தற்போது, எதிர் குரல் கொடுப்பது தி.மு.க., அதேபோல, நீட் தேர்வை கொண்டு வந்தனர். தற்போது எதிர் குரல் கொடுக்கின்றனர். முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார்.இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க, முதல்வர் பெங்களூரு சென்ற போது, காவிரியில் தண்ணீர் பெற நடவடிக்கை எடுங்கள். இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்றால், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை முழுமையாக நிறைவேற்றுங்கள். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படாது என்ற உறுதிமொழி வாங்கிக் கொடுங்கள் என்றோம். முதல்வர் கேட்கவில்லை. தி.மு.க.,வின் குடும்ப ஆட்சிக்கு, 2026ல் முடிவு கட்டப்படும். இவ்வாறு பழனிசாமி கூறினார்.