புது ஸ்டிக்கர் ஒட்ட நிர்பந்தம் வாடகை வாகன ஓட்டுனர்கள் புகார்
சென்னை: வாகனங்களில் ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர், நல்ல நிலையில் இருந்தாலும், தகுதிச்சான்று பெற, புது ஸ்டிக்கர் ஒட்ட, வட்டார போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நிர்பந்திப்பதாக, வாடகை வாகன ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.உரிமைக்குரல் ஓட்டுனர் சங்கத்தின் பொதுச் செயலர் ஜாஹிர் உசேன், தலைவர் சுரேந்தர் ஆகியோர், அளித்த பேட்டி:வாடகை வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களின், பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக, 'செயலி' வழியாக இயங்கும், பன்னாட்டு போக்குவரத்து நிறுவனங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். அந்நிறுவனங்களின் கீழ், வாகனம் ஓட்டும் போது, 2,000 ரூபாய் சம்பாதித்தால், 400 ரூபாய் கமிஷன் மற்றும் 100 ரூபாய் ஜி.எஸ்.டி., பிடித்தம் செய்யப்படுகிறது. ஆட்டோக்களுக்கு கி.மீ.,க்கு, 11 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர். மற்றொரு சரக்கு போக்குவரத்து நிறுவனம், அதிக பாரத்தை ஏற்றிச்செல்ல வற்புறுத்துகிறது. மீறுவோருக்கு அபராதம் விதிக்கிறது. மீண்டும் போக்குவரத்து துறை கமிஷனர் பேச்சு நடத்தி, அனைத்து நிறுவனங்களும், ஒரே மாதிரியான கமிஷன் வசூலிக்க உத்தரவிட வேண்டும்.வாடிக்கையாளர்களிடம் பெறும் பணத்துக்கு, ஜி.எஸ்.டி., வசூலிக்கக்கூடாது. ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும். ஆட்டோக்களுக்கு தகுதிச்சான்று பெற, 650 ரூபாய் கட்டணமாக அரசு நிர்ணயித்த நிலையில், 2.5 மீட்டர் ஸ்டிக்கர் ஒட்ட மட்டும், 650 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. நல்ல நிலையில் இருக்கும் ஸ்டிக்கரை கிழித்து, புதிய ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டுமே, தகுதிச்சான்று தரப்படுகிறது. குறிப்பிட்ட நிறுவனங்களிடம், 'ஸ்டிக்கர்' வாங்கினால் மட்டுமே தகுதிச்சான்று தரப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.