அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்பில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஏமாற்றம்
மதுரை: பள்ளிக்கல்வி துறை மானிய கோரிக்கையில், குறைந்த அளவிலான பள்ளிகளே தரம் உயர்த்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஆசிரியர்கள், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துஉள்ளனர். கடந்த, 2023 - 2024 தமிழக பட்ஜெட்டில், எட்டு மேல்நிலை, நான்கு உயர்நிலை, ஒன்பது தொடக்கப்பள்ளிகள் என, 21 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனாலும், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வைப்புத்தொகை
பின், 2024 - 25 பட்ஜெட்டில் அரசு பள்ளிகள் தரம் உயர்வு தொடர்பான அறிவிப்பு இடம் பெறவில்லை. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில், பள்ளிக்கல்வி துறை மானிய கோரிக்கையில், நான்கு தொடக்க, 14 நடுநிலை, 20 உயர்நிலைப் பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, தலா ஒரு லட்சம் ரூபாய் முன்வைப்பு தொகை செலுத்தி, 150க்கும் மேற்பட்ட நடுநிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, தலா, 2 லட்சம் ரூபாய் செலுத்தி, 100க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள், இரு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றன. அதனால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும், தரம் உயர்வு குறித்த அறிவிப்பு இல்லை என்றால், விமர்சனங்கள் எழும் என்பதால், குறைந்த எண்ணிக்கையில், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் அதிருப்தி அடைந்துஉள்ளனர். குழப்பம்
இதுகுறித்து, ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டால் தான், ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமிக்கப்படுவர். குறிப்பாக கிராமப்பகுதி மாணவர்கள் இடைநிற்றல் தவிர்க்கப்படும். அந்த வகையில், 100க்கும் மேற்பட்ட பள்ளி கள், தரம் உயர்வுக்காக காத்திருக்கும் போது, குறைந்த எண்ணிக்கையிலான அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் விபரத்தை, மே மாதம் வெளியிட்டு, ஜூனில் நடைமுறைக்கு வர, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோல பதவி உயர்வுக்கு டி.இ.டி., கட்டாயம், முதுகலை பட்ட ஆசிரியர்களுக்கு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கக்கூடாது போன்றவை குறித்து, நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. இதனால், பதவி உயர்வு தடைபட்டு, ஆயிரக்கணக்கான அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுபோன்ற சிக்கல்களை தீர்ப்பதற்கான அறிவிப்புகள் இல்லை. குழப்பமான சூழலில் தான் இன்னும் கல்வித்துறை செயல்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.