கறிக்கோழி பிரச்னைக்கு தீர்வு தொழில்நுட்ப குழு அமைப்பு
சென்னை: கறிக்கோழி வளர்ப்பு குறித்து ஆய்வு செய்து, பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாவட்ட அளவில் தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளி யிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஆண்டுக்கு 55 கோடி கறிக்கோழி வகை கோழிகள் வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 20,000 கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் உள்ளனர். கறிக்கோழி உற்பத்தி செலவு, சிரமங்கள் தொடர்பாக, கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக, இரண்டு முறை கால்நடை பராமரிப்புதுறை இயக்குநர் பேச்சு நடத்தினார். கறிக்கோழி ஒருங்கிணைப்பாளர்கள், கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள், வர்த்தக ரீதியிலான ஒப்பந்தம் செய்து செயல்படுகின்றனர். எனவே, கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து தீர்வு காண, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பேராசிரியர், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர், கால்நடை நோய் நுண்ணறிவு உதவி இயக்குநர், வேளாண் அலுவலர் என, மாவட்ட அளவில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.