மரத்தால் தடைபடும் கோயில் கட்டுமான பணிகள்
சோழவந்தான்: 'முள்ளிப்பள்ளத்தில் சங்கையா, ஊர்காவலன் கோயிலில் உள்ள வாகை மரத்தால் கட்டுமான பணிகள் தடைபடுகிறது' என கிராமத்தினர் வேதனை தெரிவித்தனர்.பழமையான இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகளாகி விட்டது. எனவே கிராமத்தினர் புதிய கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்தனர். இக் கோயில் அருகேஅரசுக்கு சொந்தமான வாகை மரம் உள்ளது. இதன் வேர்கள் கோயில் அடித்தளத்தின் அனைத்து பகுதிகளிலும் ஊடுருவியுள்ளது. இம்மரத்தை அகற்றாமல் கோயில் கட்டுமான பணிகள் நடக்க இயலாத நிலை உள்ளது.இது குறித்து அப்பகுதி செல்வம் கூறியதாவது: கோயிலை புதுப்பிக்க மரம் இடையூறாக உள்ளதால் பணிகள் செய்ய முடியவில்லை. 2024 நவம்பரில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மரத்தை அகற்ற மனு அளிக்கப்பட்டது. இதன்பின் ஆர்.டி.ஓ., நேரடியாக பார்வையிட்டார். ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரம் நட வேண்டும் என்றதால், 25 பனை விதைகளும், மரக்கன்றுகளும் நடப்பட்டன.அதனை பசுமை தீர்ப்பாய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன்பின் வனத்துறை அதிகாரிகள் மூலம் மரத்தின் அளவு மதிப்பீடு செய்யப்பட்டு கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்பு 6 மாதங்களாக எந்த நடவடிக்கையும் இல்லை. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பயனில்லை. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து கோயில் கட்டுமான பணிகள் நடைபெற உதவ வேண்டும் என்றார்.