120 கோடி முட்டை சப்ளைக்கு டெண்டர்
சென்னை,:தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், 9.80 லட்சம்; அங்கன்வாடி மையங்களில் 4.51 லட்சம் மாணவ - மாணவியர் மதிய உணவு சாப்பிடுகின்றனர். அவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. வாரந்தோறும் 2.9 கோடி முட்டைகள் வீதம், ஓராண்டுக்கு 119.87 கோடி முட்டைகள் சப்ளை செய்ய, தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய சமூக நலத்துறை டெண்டர் விடப்பட்டுள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கும், அக்மார்க் முத்திரை பெற்ற, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் உள்ள, ஆண்டுக்கு 20 கோடி ரூபாய்க்கு குறையாமல், முட்டை வர்த்தகம் செய்யும் திறனுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். சப்ளை செய்யும் கோழி முட்டை எடை, 45 முதல் 52 கிராம் வரை இருக்க வேண்டும். அங்கன்வாடிகளுக்கு வாரம் இருமுறை, பள்ளிகளுக்கு வாரம் ஒருமுறை, முட்டை சப்ளை செய்ய வேண்டும். விருப்பம் உள்ள நிறுவனங்கள், அடுத்த மாதம் 14ம் தேதி காலை 11:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.