உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலுார் வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் பயங்கரவாதி சித்திக் கைது

வேலுார் வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் பயங்கரவாதி சித்திக் கைது

சென்னை:ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் வேலுார் வெள்ளையப்பன் மற்றும் பா.ஜ., நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில், பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக், 59; பயங்கரவாதியான இவர் மீது, ஹிந்து அமைப்பு மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகள் உள்ளன. கோவை தொடர் குண்டு வெடிப்பு, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குண்டு வைத்தது, மதுரை வந்த பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை வெடிகுண்டு வைத்து கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட வழக்குகளும் உள்ளன. இவர், கடந்த, 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். ஆந்திர மாநிலத்தில் பதுங்கி இருந்த இவரை, தமிழக காவல் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், கடந்த ஜூலை 1ம் தேதி கைது செய்தனர். அவரின் கூட்டாளி முகமது அலியும் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஆந்திராவில் தங்கி இருந்த இடத்தில் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டனர். இதனால், அம்மாநில போலீசாரும், இவர்களை கைது செய்து, மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து வந்து அடைத்துள்ளனர். இதற்கிடையே, தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், ஏழு வழக்குகள் தொடர்பாக அபுபக்கர் சித்திக்கை, ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்த பயங்கரவாத செயல்களுக்கு அபுபக்கர் சித்திக் மூளையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 2012ல், பா.ஜ., மருத்துவரணி செயலராக இருந்த அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு தொடர்பாகவும் அபுபக்கர் சித்திக்கை, ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற வழக்கிலும், ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 2013, ஜூலை 1ம் தேதி, ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் வேலுார் வெள்ளையப்பன், அதே மாதம், 19ம் தேதி நடந்த பா.ஜ., நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்குகளில், அபுபக்கர் சித்திக்கை நேற்று மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்குகள் தொடர்பாகவும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Natchimuthu Chithiraisamy
செப் 25, 2025 17:01

இந்திய நாட்டில் பிஜேபி ஆட்சி நடக்கிறது. இந்த செய்தி கேட்டு பிஜேபி ல் மக்கள் சேருவார்கள்


Rathna
செப் 21, 2025 18:05

மர்ம நபர்களின் அநியாயம் நீண்டு கொண்டே போகிறது.


Sesh
செப் 20, 2025 09:36

ஏன் அபுபக்கர் சித்திக் போட்டோவை போடாமல் அவரால் பாதிக்கப்பட்டவரின் போட்டோவை போடுகிறீர்கள் .


Ranganathan Ranga
செப் 20, 2025 11:17

adhudhan tamilnattu oodaga dharmam


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை