தஞ்சாவூர் : தமிழகத்தின், 'நம்பர் 1' மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சியை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, 100 ஸ்மார்ட் சிட்டி நகரங்களை தேர்வு செய்து, அதன்படி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, தஞ்சாவூர் மாநகராட்சியில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, மாநகராட்சியில், 246 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மாநகரில் குடிநீர், பாதாள சாக்கடை உடைப்பு, குப்பை தேங்குதல் போன்ற பிரச்னைகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே, கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக கண்காணித்து பிரச்னைக்கு தீர்வு காணப்படுகிறது. இதை, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை சார்பில், தணிக்கை செய்யப்பட்டு, மதிப்பீடு வெளியிடப்படுகிறது.இதில், தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில் தஞ்சாவூர் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 14வது இடத்தையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி மேயர் ராமநாதன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:தமிழகத்தில் இருந்து தஞ்சாவூர், திருப்பூர், சென்னை, திருச்சி, ஈரோடு, துாத்துக்குடி, சேலம், நெல்லை, மதுரை, வேலுார் என 10 மாநகராட்சிகளில், தஞ்சாவூர் மாநகராட்சி முதலிடத்தையும், நாட்டில் 100 மாநகராட்சிகளில், 14வது மாநகராட்சியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.