| ADDED : நவ 15, 2024 06:11 AM
மதுரை : '2026 சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து மத்திய தலைமைதான் முடிவு செய்யும். அதை செயல்படுத்தும் இடத்தில்தான் நான் இருக்கிறேன்'' என்று மதுரையில் பா.ஜ., ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா கூறினார்.அவர் கூறியதாவது: டாக்டர்கள் மீது தாக்குதல் என்பதுதான் திராவிட மாடல். இவர்கள் பியூட்டி பார்லர், பரோட்டா கடையிலும் தாக்குதல் நடத்துகின்றனர்.திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தபின் சமூக ஒழுக்கம் கெட்டு விட்டது. மூன்றாண்டுகளாக தமிழகத்தில் போதைப் புழக்கம் அதிகரித்துள்ளது. கோல்கட்டாவில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டது போன்ற நிலை தமிழகத்திலும் அரங்கேறி வருகிறது. அரசு பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவத்தால் வருங்காலங்களில் சீரியசான நோயாளிகளை சிகிச்சைக்கே எடுத்துக் கொள்ள மாட்டோம் என டாக்டர்கள் சொல்லும் நிலை வரும்.மதுரையில் பா.ஜ., சார்பில் போலீசிடம் 15 புகார்கள் கொடுத்துள்ளனர். அதன்மீது இதுவரை ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை. ஆனால் பா.ஜ.,வினர் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். எனது நாக்கை வெட்டுவேன் என்பவர் மீது நடவடிக்கை இல்லை. ஆனால் நடிகை ஒருவரை கைது செய்ய செல்கின்றனர்.பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க.,வின் பழனிசாமி கூறுவதால் அவர் எங்களை உதாசீனப்படுத்துவதாக கூறுவது தவறு. நாங்கள் அவரிடம் வரிசையில் நின்று அப்ளிகேஷன் போட்டோமா. கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் நான் சொல்ல மாட்டேன். மத்திய தலைமையில் உள்ள 16 பேர் எடுக்கும் முடிவை செயல்படுத்தும் இடத்தில் நான் இருக்கிறேன்.கோயில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக்கிவிட்டோம். திராவிட மாடல் இதை செய்துள்ளது என முதல்வர் கூறுவது தவறானது. நாற்பதாயிரம் கோயில்கள் அறநிலையத்துறையில் உள்ளன. அவற்றில் ஆகம கோயில்கள் 3 ஆயிரம் தவிர மீதியுள்ள 37 ஆயிரம் கோயில்களில் அனைவரும் அர்ச்சகராக உள்ளனர். எனவே அவர்கள் கூறுவது திராவிட மாடலின் ஏமாற்று வேலை இவ்வாறு அவர் கூறினார்.* திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் எச். ராஜா கூறியதாவது: தமிழகத்தில் டாக்டர் கொலை முயற்சி உள்ளிட்ட காரணங்களால் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நாடு முழுவதும் பசுவதைக்கு தடை இருக்கிறது. தமிழகத்தில் பசுவதையை அனுமதிக்க எந்த அரசும் சட்டம் இயற்றவில்லை. எனவே இங்கு மாடுகளை வெட்ட முடியாது என்றார்.