உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி மே இறுதியில் முதல்வர் பங்கேற்கிறார்

மதுரையில் பட்டா வழங்கும் நிகழ்ச்சி மே இறுதியில் முதல்வர் பங்கேற்கிறார்

மதுரை : மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பட்டா வழங்கும் நிகழ்ச்சி மே இறுதியில் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கான கெடுபிடி உத்தரவுகளால் வருவாய் அதிகாரிகள் முனகலுடன் பணியாற்றி வருகின்றனர்.தமிழக அரசு வரும்நாட்களில் 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில் நீர்நிலை தவிர்த்த புறம்போக்கு நிலங்களில், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக குடியிருப்போருக்கு பட்டா வழங்க உள்ளது. இதில் ஒருபகுதியாக மதுரை மாவட்டத்தில் அரசு சார்பில் 50 ஆயிரம் பட்டாக்கள் வழங்க ஏற்பாடு நடக்கிறது.புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசிப்போருக்கு பட்டாக்கள் இருப்பதில்லை. அவர்களுக்கும் நிபந்தனைகளுடன் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக கடந்த மார்ச் மத்தியில் விழா நடத்தி முதல்வரே பயனாளிகளுக்கு பட்டா வழங்க உள்ளதாக கூறினர்.சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் துவங்கியதை அடுத்து பட்டா வழங்கும் நிகழ்ச்சியும் ஏப்ரலுக்குத் தள்ளிப் போனது. அதன்பின் பிரதமர் வருகை, சட்டசபையில் மானிய கோரிக்கை நிகழ்ச்சிகள் என தொடர்ந்து வருகிறது. இம்மாத இறுதியில் சித்திரைத் திருவிழா ஏப். 29ல் துவங்கி மே 16 வரை நடக்கிறது. இதனால் முதல்வர் ஸ்டாலின் மதுரை வருவதும் தள்ளிப் போகிறது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: முதல்வர் மே இறுதியில் மதுரை வர வாய்ப்புள்ளது. அதற்கேற்ப பட்டா தயார் செய்யும்படி தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் 11 தாலுகாக்கள் உள்ளன. ஒவ்வொரு தாலுகாவுக்கும் பல ஆயிரம் பட்டாக்கள் வழங்கும்படி தெரிவித்துள்ளனர். இதற்காக பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போர் குறித்து கணக்கெடுத்து தகுதியுள்ளோரை அணுகி வருகிறோம்.ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பெரும்பாலும் பெண்கள் பெயரில் பட்டா வழங்க ஏற்பாடு செய்யும்படி தெரிவித்துள்ளனர். ஆனால் பல குடும்பங்களில் இதற்கு எதிர்ப்பும் கிளம்புகிறது. ஆயிரக்கணக்கில் பட்டா வழங்க எப்படி ஏற்பாடு செய்வது எனத் தெரியவில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி