'மணல் கொள்ளைக்காகவே தடுப்பணை கட்டவில்லை'
'தமிழக மக்களின் உரிமை மீட்போம்' என்ற பெயரில் நேற்று முன்தினம் திருப்போரூரில் நடைபயணத்தை துவக்கிய அன்புமணி, நேற்று செங்கல்பட்டில் தனது பயணத்தை தொடர்ந்தவர், பின், உத்திரமேரூரிலும் நடைபயணம் மேற்கொண்டார். நடை பயணத்தில், அவர் பேசியதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,800 ஏரிகள் இருந்தன; தற்போது 900 ஏரிகள் மட்டுமே உள்ளன. மணல் கொள்ளை அடிக்க முடியாது என்பதால், தடுப்பணைகள் கட்ட மறுக்கின்றனர். முன்பெல்லாம் பள்ளி, கல்லுாரி வாசல்களில் இலந்தை பழம், ஆரஞ்ச் மிட்டாய் விற்பர். இப்போது, கஞ்சா, அபின் விற்கும் அளவுக்கு, போதையில் தமிழகம் தள்ளாடுகிறது. டாஸ்மாக் மது, 24 மணி நேரமும் கிடைக்கிறது. ஆனால், சமூக நீதி மட்டும் கிடைக்கவில்லை. முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. நான்கரை ஆண்டுகளில், 7,000 கொலைகள் நடந்து உள்ளன. மக்களுக்கான அடிப்படை சேவைகளை செய்து கொடுக்கவில்லை. தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதிபடி, சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றி இருந்தால், 15 நாட்களில் சேவைகள் மக்களின் வீடு தேடி வந்திருக்கும். ஆனால், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்திக் கொண்டுள்ளனர். எல்லாமே ஏமாற்று வேலை. மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமை தொகை கொடுத்து விட்டால், பெண்களுக்கான உரிமை கிடைத்து விடுமா? இவ்வாறு அவர் பேசினார்.