இலவச வேட்டி சேலை கொள்முதல் செய்த நிலுவை தொகை வழங்காமல் இழுத்தடிக்கும் தி.மு.க., அரசு செயல்பட முடியாமல் திணறும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்
ஆண்டிபட்டி : கைத்தறி விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு இலவச வேட்டி சேலை கொள்முதல் செய்த பாக்கித்தொகையை தி.மு.க., அரசு வழங்காமல் இழுத்தடிப்பதால், பல கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதனால் மூலதன நெருக்கடியால் கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து செயல்பட முடியாமல் திண்டாடுகின்றன.ஆண்டுதோறும் தைப் பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு ரேஷன் கார்டு அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இலவச சேலைகள், வேட்டிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்திற்கு ஆண்டு தோறும் தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. 2023 - -24ல் இத்திட்டத்தில் 1.68 கோடி வேட்டிகளும், 1.63 கோடி சேலைகளும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி நடந்து வருகின்றன. மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெறும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தி செய்யும் சேலைகளை கோ ஆப் டெக்ஸ், கைத்தறி, துணிநுால் துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டு பொங்கல் பண்டிகையில் பயனாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.கடந்த 2 ஆண்டுகளில் தமிழக அரசு மூலம் கொள்முதல் செய்த சேலைகளுக்கான பாக்கித் தொகை கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் கூட்டுறவு சங்கங்களை தொடர்ந்து நடத்த முடியாமல் நிர்வாகங்கள் திணறுகின்றன.நெசவாளர்கள் கூறியதாவது: ஈரோடு, திருச்செங்கோடு, வேலுார், விருதுநகர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் 1200க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்கின்றனர். அரசு கொள்முதல் செய்த சேலைகளுக்கான தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு மாதந்தோறும் வழங்க வேண்டும். இந்த தொகை மூலம் கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகச் செலவு, நெசவாளர்களுக்கான கூலி வழங்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் அனைத்து நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும் அரசு மூலம் வரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.100 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதனால் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் கடன் சுமையால் தொடர்ந்து செயல்பட முடியாமல் திண்டாடுகின்றன. தி.மு.க., அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.