உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு துரும்பை கூட அரசு அசைக்கவில்லை * அண்ணாமலை குற்றச்சாட்டு

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு துரும்பை கூட அரசு அசைக்கவில்லை * அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை:'போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, தி.மு.க., அரசு ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கோவையில், 17 வயது சிறுமி, ஏழு மாணவர்களால் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பெருகி இருக்கும் போதைப் பொருள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்கு சென்று கொண்டிருக்கின்றனர் என்பதை தான், சிறுமியர் மீதான இதுபோன்ற கூட்டு பாலியல் வன்முறைகள் காட்டுகின்றன.ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் சிறுமியர், மாணவியர், பெண் காவலர்கள், பெண் அரசு அதிகாரிகள் என, பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, தி.மு.க., அரசு ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை. குற்றவாளி, தி.மு.க.,வை சேர்ந்தவன் என்றால், அவனை காப்பாற்றுவதற்கு பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்திவிட்டு, வீண் விளம்பரத்துக்காக 'அப்பா, அண்ணா' என்று நாடகம் ஆடுவதால், யாருக்கு என்ன பலன் என்பதை முதல்வர் ஸ்டாலின் கூறுவாரா?

அரசு பணி தேர்வுகளில் முறைகேடு

அவரது இன்னொரு அறிக்கை:கடந்த, 2023ல் தமிழக காவல் துறை காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கியதில், பல்வேறு குழப்பங்கள், முறைகேடு நடந்திருப்பதாக, இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு, பின் நீக்கப்பட்ட இளைஞர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.இறுதி பட்டியலில் தேர்வு பெற்றவர்கள் குறித்த முழு விபரங்களையும் வெளியிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 2024 அக்., 10ல், தேர்ச்சி பெற்றவர்களின் பெயர், பிறந்த தேதி, மதிப்பெண், சமூக பிரிவு உள்ளிட்ட, 15 விபரங்களையும் இறுதி பட்டியலில் வெளியிடுமாறும், அதுவரை ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியல் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.ஆனால், நான்கு மாதங்களாகியும் இன்று வரை, தேர்ச்சி பெற்றவர்களுக்கான முழு விபரங்கள் அடங்கிய இறுதி பட்டியல் வெளியிடப்படவில்லை. அரசு பணிகளுக்கான தேர்வுகளில், பல முறைகேடுகள் நடக்கின்றன. அதற்கு, காவல் துறை பணிகளும் விலக்கல்ல.இவ்வாறு அவ்அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை