சொத்துவரி உயர்விற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் பைசல் செய்தது
மதுரை : துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் நகராட்சி பகுதியில் சொத்துவரி உயர்விற்கு எதிரான வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுகி தீர்வு காண உத்தரவிட்டு பைசல் செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. திருச்செந்துார் சுடலை தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்செந்துார் நகராட்சி பகுதி வீடுகளுக்கு 2022-2023 ஆண்டுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதற்காக 2022 ல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை பிறப்பித்த அரசாணையில் விதிமுறைகளை பின்பற்றவில்லை. சராசரியைவிட அதிகமாக சில வீடுகளுக்கு வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாணையை பின்பற்றி முறையாக சொத்துவரி நிர்ணயிக்க வலியுறுத்தி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை கூடுதல் முதன்மை செயலர், நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். மனுதாரர் தரப்பில் டேவிட் கணேசன் ஆஜரானார்.அரசு வழக்கறிஞர் அசோக்,''2022 ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை செயல்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: சொத்து வரியில் சில தவறான கணக்கீடுகள் காரணமாக இம்மனு தாக்கல் செய்யப்பட்டது. பிரச்னைகள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுகி தீர்வு காண வேண்டும் என இந்நீதிமன்றம் கருதுகிறது. வழக்கு பைசல் செய்யப்படுகிறது என்றது.