உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்வாரியத்தில் பணியின்போது இறந்தவரின் மணமான சகோதரிக்கு முதல் முறையாக பணி

மின்வாரியத்தில் பணியின்போது இறந்தவரின் மணமான சகோதரிக்கு முதல் முறையாக பணி

புதுக்கோட்டை: பணியின் போது இறந்த மின் வாரிய பணியாளரின் திருமணமான சகோதரிக்கு, மின்வாரிய சட்டத்தை மாற்றி, முதல்முறையாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், குப்பக்குடியை சேர்ந்த சரத்குமார், 28, ஆலங்குடி மின் வாரிய அலுவலகத்தில், கேங்க் மேனாக பணியாற்றினார். 2023 மே, 31ல், எதிர்பாராத விதமாக, பணியின் போது மின்சாரம் பாய்ந்து இறந்தார். அப்போது, அதிகாரிகளை கண்டித்தும், வாரிசு அடிப்படையில் அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலை கேட்டும், அவரது உறவினர்கள் மறியல் செய்தனர். அங்கு வந்த அமைச்சர் மெய்யநாதன், பேச்சு நடத்தி, உரிய இழப்பீடு வழங்க உறுதி அளித்தார். 'மின்வாரியத்தில் பணிபுரியும் திருமணமாகாத பணியாளர்கள் இறந்து விட்டால், திருமணமான அவரது சகோதர, சகோதரியருக்கு வேலை கிடையாது' என, தமிழக அரசின் சட்டம் உள்ளது. இந்நிலையில், அமைச்சர் மெய்யநாதன், சரத்குமார் குடும்பத்தினருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றார். அமைச்சரின் முயற்சியால் மின்வாரியத்தில் பணிபுரியும் திருமணமாகாத பணியாளர்கள் இறந்து விட்டால், அவரது சகோதர, சகோதரிகளுக்கு திருமணமாகி இருந்தாலும் கருணை அடிப்படையில் வேலை வழங்கலாம் என, மின்வாரிய சட்டத்தை மாற்றி, உத்தரவு அமைக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் முதன்முதலாக கருணை அடிப்படையில், அவரது சகோதரி உமாமகேஸ்வரி, 37, என்பவருக்கு, மின்வாரியத்தில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணை மற்றும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, 3 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், நேற்று, அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை