சென்னை: எரிபொருள் செலவு குறைவால், தமிழகத்தில், சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.மத்திய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்கவும், பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக, இயற்கை எரிவாயுவை எரிபொருளாக பயன்படுத்துமாறு, அனைத்து தரப்பினரையும் அறிவுறுத்தி வருகிறது. எரிவாயு முனையம்
திருவள்ளூர் மாவட்டம் எண்ணுார் துறைமுக வளாகத்தில், இந்தியன் ஆயில் நிறுவனம், எல்.என்.ஜி., எனப்படும், திரவநிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது. இதற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பலில் திரவ நிலை எரிவாயு எடுத்து வரப்படுகிறது. இந்த எரிவாயு, வீடுகளுக்கு பி.என்.ஜி., அதாவது குழாய் வழி எரிவாயுவாகவும்; வாகனங்களுக்கு சி.என்.ஜி., எனப்படும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும் வினியோகம் செய்யப்படுகிறது. ஏழு நிறுவனங்கள்
தமிழகம் முழுதும் இந்த எரிவாயு வினியோகம் செய்யும் பணியை மேற்கொள்ள, ஏழு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்நிறுவனங்கள், 2030க்குள் 2,785 சி.என்.ஜி., மையங்கள் வாயிலாக வாகனங்களுக்கும், 2.30 கோடி வீடுகளுக்கு குழாய் வழித்தடத்திலும் இயற்கை எரிவாயு வினியோகிக்க வேண்டும். இதற்காக குழாய் வழித்தடம், சி.என்.ஜி., மையம் அமைக்கும் பணிகள், இரு ஆண்டுகளுக்கு முன் துவங்கின. செலவு மிச்சம்
தற்போது, சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை போன்ற நகரங்களிலும், சி.என்.ஜி., மையங்கள் துவக்கப்பட்டு வருகின்றன; மாநிலம் முழுதும், 335 மையங்கள் செயல்படுகின்றன. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் உடன் ஒப்பிடும் போது, இயற்கை எரிவாயு பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகளுக்கு, 25 - 30 சதவீதம் செலவு மிச்சமாகிறது. இதனால், எரிபொருள் செலவை மிச்சப்படுத்த பலரும், குறிப்பாக வாடகை வாகனங்களை ஓட்டுவோர், சி.என்.ஜி., எரிவாயுவில் ஓடும் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து, தமிழகம் முழுதும் சி.என்.ஜி.,யில் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை, 1.17 லட்சமாக அதிகரித்துள்ளது.