திருச்செங்கோடு: த.வெ.க., நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலர் செந்தில்நாதன் , நள்ளிரவில் அக்கட்சியின் மகளிரணி நிர்வாகி வீட்டிற்கு சென்ற வீடியோ பரவியதால், அவரது மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கூட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனிரா பானு. இவர், த.வெ.க.,நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளராக உள்ளார். த.வெ.க., நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலராக இருந்தவர், ராசிபுரத்தைச் சேர்ந்த செந்தில்நாதன். கடந்த 18ம் தேதி நள்ளிரவு, மகளிரணி அமைப்பாளர் முனிரா பானு வீட்டிற்கு செந்தில்நாதன் சென்றுள்ளார். அவரது காரை பார்த்த முனிராவின் உறவினர்கள், அதிரடியாக வீட்டிற்குள் சென்று, 'நள்ளிரவில் எதற்காக இங்கு வருகிறீர்கள்' என சரமாரியாக கேள்வி எழுப்பினர். அன்று இரவு முதல், மறுநாள் அதிகாலை 4:00 மணி வரை, பல்வேறு கட்சி நிர்வாகிகள் வந்து சமரசம் பேசி, செந்தில்நாதனை விடுவித்துள்ளனர். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இந்த பரபரப்பான சூழலில், த.வெ.க., தலைமையில் இருந்து செந்தில்நாதனை நேற்று காலை சென்னைக்கு அழைத்தனர். இதையடுத்து, த.வெ.க., மகளிரணி நிர்வாகி வீட்டில் அத்துமீறி நுழைந்த, த.வெ.க., நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலர் செந்தில்நாதனின் பதவி பறிக்கப்பட்டதாக, அக்கட்சி சார்பில் நேற்று மாலை அறிக்கை வெளியானது. ஏற்கனவே, திருச்செங்கோடு வேட்பாளராக த.வெ.க., மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலர் அருண்ராஜ் அறிவிக்கப்பட்டதாக வதந்தி பரவிய நிலையில், தற்போது, அவருக்கு நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலர் பதவியும் கூடுதலாக வழங்கப்படும் என, அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
'சட்டரீதியாக சந்திப்போம்'
த.வெ.க., மகளிரணி நிர்வாகி முனிரா பானு, 'வீடியோ' ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது: தி.மு.க., அரசு என் பெயரை கெடுக்க, தவறான வீடியோவை சித்தரித்து வெளியிட்டுள்ளது. ஒரு பெண் குறித்து பேசும் முன், என்ன நடந்தது என்பதை தெரிந்து பேச வேண்டும். இங்கு ஒரு தவறு நடக்க இருந்ததை, என் குடும்பத்தினரிடம் நான் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் வந்து பேசிக் கொண்டிருந்தனர். அதற்குள், தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர், வீடியோ எடுத்து, தவறாக சித்தரித்து வெளி யிட்டுள்ளனர். இதை, த.வெ.க., தலைமையிடம் தெரிவித்துள்ளேன். இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். நடந்த சம்பவத்துக்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தி.மு.க.,வினர் இது போன்ற இழிவான அரசியல் செய்ய வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.