உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாடு; ஒரே தேர்தலால் குழப்பம் தான் ஏற்படும் மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலின் ஆவேசம்

ஒரே நாடு; ஒரே தேர்தலால் குழப்பம் தான் ஏற்படும் மத்திய அரசுக்கு எதிராக ஸ்டாலின் ஆவேசம்

சென்னை:''தி.மு.க., நுாற்றாண்டை கடப்பதற்குள், மாநில சுயாட்சியை வென்றெடுக்க உறுதியேற்போம். தி.மு.க., கூட்டணியில் மோதல் வராதா என, கொள்கை எதிரிகள் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் கனவு எப்போதும் பலிக்காது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.காஞ்சிபுரத்தில் நடந்த, தி.மு.க., பவள விழா பொதுக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கூட்டணி கட்சி தலைவர்கள் சிறப்பான முறையில் வாழ்த்தினர். நாங்கள் செய்த சாதனைக்கு, நீங்கள் உறுதுணையாக இருக்கிறீர்கள். எங்களுக்கு கிடைத்த புகழ் மாலையில், உங்களுக்கும் பங்கு உள்ளது. எங்கள் இயக்கம், உங்கள் இயக்கம் என இல்லாமல், ஒரே கொள்கை உடைய தோழமை இயக்கங்களாக உள்ளோம்.நாம் கூட்டணி அமைத்த பின், தமிழகத்தில் நடந்த அனைத்து தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளோம். இது வெற்றி கூட்டணி. தமிழகத்தில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்து, அகில இந்திய அளவில், பா.ஜ.,வை வீழ்த்த, 'இண்டி' கூட்டணி அமைக்கப்பட்டது. சில கட்சிகள் உருவாக்கும் கூட்டணி, தேர்தல் நேரத்தில் உருவாகி, தேர்தல் முடிந்ததும் கலைந்து விடும். ஆனால், நம் கூட்டணி அப்படி அல்ல.நாம் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து, கொள்கை எதிரிகளுக்கு பொறாமை. நமக்கு இடையே மோதல் வராதா, பகை வளர்க்க முடியாதா என பொய்களை பரப்பி, தற்காலிகமாக சந்தோஷம் அடைகின்றனர். அவர்கள் கனவு எப்போதும் பலிக்காது.

சட்ட திருத்தம்

தேர்தல் வெற்றி கணக்கில் நாம் ஐக்கியமாகவில்லை. பாசிசத்தையும், மதவாதத்தையும் தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்பதற்காக இணைந்துள்ளோம். அதை மறந்து விடக் கூடாது. தி.மு.க.,வின் நுாற்றாண்டுக்குள், அனைத்து அதிகாரங்களும் உடைய மாநிலங்களாக மாற்ற, அரசியலமைப்பு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். அதற்கான சட்ட முன்னெடுப்புகளை தி.மு.க., செய்யும். அந்த பயணத்தில் நாம் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும்.சமுதாயத்தில் சீர்திருத்தம், பொருளாதாரத்தில் சமத்துவம், அடிப்படை ஜனநாயகம் ஆகியவற்றை உருவாக்க, தி.மு.க., துவக்கப்பட்டது. இதை நிறைவேற்ற கட்சியும், ஆட்சியும் உள்ளது. இந்த மூன்று கொள்கைகள் நிறைவேற, அதிகாரங்கள் பொருந்தியவையாக மாநிலங்களை மாற்ற வேண்டும். மாநில சுயாட்சி கொள்கையை அடைய, பல்வேறு முன்னெடுப்புகளை கட்சி எடுத்தது. வாய்ப்பு கிடைக்கும் போது, அதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம். தற்போதுள்ள மத்திய அரசு, மாநிலங்களை யூனியன் பிரதேசங்களாக மாற்ற நினைக்கிறது.மாநிலங்களை ஒடுக்கி, ஒற்றை ஆட்சி முறையை அமல்படுத்த, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை கொண்டு வர பார்க்கிறது. கடந்த 1967 வரை ஒன்றாக தேர்தல் நடந்தது என்கின்றனர். அப்போது இந்தியாவின் மக்கள் தொகை என்ன; தற்போது என்ன?அன்றைய இந்தியாவும், இன்றைய இந்தியாவும் ஒன்றா? அன்றைய வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு; இன்று எவ்வளவு?நாம் எழுப்பும் கேள்விகளில் முக்கியமானது, லோக்சபாவுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிந்ததா; ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. லோக்சபா தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடியாதவர்கள், லோக்சபா, சட்டசபை தேர்தல்களை, ஒரே நேரத்தில் நடத்துவது எப்படி சாத்தியமாகும்?காஷ்மீரில் தற்போது தேர்தல் நடக்கிறது. 90 எம்.எல்.ஏ.,க்களை தேர்வு செய்ய, மூன்று கட்ட தேர்தல். இந்நிலையில் ஒரே தேர்தல் எனக் கூற வெட்கம் இல்லையா? ஒரே வரி, ஒரே மொழி, ஒரே உணவு என ஒரே பாட்டை பாடுகின்றனர். இது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமானது.

முன்கூட்டியே கலைப்பு

இதனால், மாநில அரசுகளின் பதவி காலம் குறையும்; குழப்பம் ஏற்படும். லோக்சபா தேர்தலை பொறுத்தவரை, ஏற்கனவே பல முறை முன்கூட்டியே கலைக்கப்பட்டுள்ளது. தற்போது இருப்பது பெரும்பான்மை உடைய அரசு இல்லை. பா.ஜ.,வுக்கு 240 எம்.பி.,க்கள் தான் உள்ளனர். எனவே பா.ஜ., தலைமை எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். கொஞ்சம் இடைவெளி விட்டால் புகுந்து விடுவோம். மனதில் வைத்துக் கொள்ளுங்கள். தி.மு.க., நுாற்றாண்டை கடப்பதற்குள், மாநில சுயாட்சியை வென்றெடுக்க உறுதியேற்போம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Narasimhan
செப் 29, 2024 18:27

அதை தேர்தல் கமிஷன் சொல்லணும். நீங்க ஒங்க வேலைய பாருங்க.


panneer selvam
செப் 29, 2024 15:00

Stalin ji , just read your father announcement on 1971 supporting one election simultaneously for both state and central before you speak . Do not live on forgetfulness of Tamil society .


vijay
செப் 29, 2024 13:45

ஒரே நாடு ஒரே தேர்தல் தவறாக புரிந்து கொள்ள படுகிறது. நோக்கம் பாராளுமன்றமும் , சட்டசபையும் அதன் காலாவதி கழிந்து தேர்தல் வைக்கும் போது வருடம் முழுவதும் இந்தியாவில் எங்கோ மூலையில் தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கின்றது இதனால் வளர்ச்சி பணிகள் தேர்தல் நடத்தை முறைகளினால் பாதிக்க படுகிறது, பிரதமர் மற்றும் சக அமைச்சர்கள் தேர்தல் பணிக்கு வருவதால் அவர்களின் நேரமும் வீணடிக்க படிக்கறது. இந்தியா தவிர்க்கவே பாராளுமன்றத்தையும் ,சட்டசபையையும் ஒரே நேரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுளளது. இதற்க்கு அதிக பட்சமாக ஒரூ மாதம் எடுக்கலாம் .பின்பு தேர்தல் அடுத்த ஐந்து வருடம் கழித்து தான் .நேரமும் மிச்சம், செலவும் மிச்சம்.


Dharmavaan
செப் 29, 2024 08:35

சுதந்திரத்துக்கு எதிரான பிரிவினைவாதி கூட்டம் த்ரவிட கூட்டம் தேச ஒற்றுமைக்கு ஆபத்து கட்சி தடை செய்யப்பட வேண்டும்


Rajan
செப் 29, 2024 04:43

ஒரே நாடு என்பதை ஒப்புக்கொண்டதே ஒரு முன்னேற்றம் தானே. இன்னும் சில மாதங்களில் மற்ற முடிவையும் ஏற்பார். மத்திய அரசு முடிவை மேடையில் தான் எதிர்க்க முடியும். ஜனாதிபதி கையெழுத்து போட்டால், தேர்தலில் நிற்க மாட்டோம் என்று சொல்லலாமே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை