உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இனி வரும் காலங்களில் புயல் வலிமையாகும்

இனி வரும் காலங்களில் புயல் வலிமையாகும்

சென்னை : ''கடலில் வெப்ப அலை அதிகரிப்பதால், இனி வரும் காலங்களில் உருவாகும் புயல்கள் வலிமை பெற்றதாக மாறும் என்றும், ஒரே இடத்தில் அதி கனமழை பெய்வதற்கும் அதுவே காரணமாக இருக்கும்,'' என்றும், மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ரவிச்சந்திரன் எச்சரித்துள்ளார்.சென்னை பள்ளிக்கரணையில், என்.ஐ.ஓ.டி., எனப்படும், தேசிய கடல்சார் தொழில்நுட்ப கழகம் இயங்கி வருகிறது. அதன், 31வது நிறுவன நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.அவர் பேசியதாவது:பருவநிலை மாற்றம் காரணமாக, வரலாறு காணாத கனமழை என்பது தமிழகத்தில் மட்டுமல்ல; உலகம் முழுதும் பரவலாக பதிவாகி வருகிறது. அதற்கு அண்மை உதாரணம், துபாயில் கொட்டித் தீர்த்த பெருமழை.

சூறைக்காற்று

அங்கு இருண்ட மேகங்கள் ஒட்டு மொத்த நகரத்தையும் மூடி விட்டன. பகலானது இரவு போல மாறியது; சூறைக்காற்று பலமாக வீசியது. வீட்டிலிருந்த பொருட்கள் துாக்கி வீசப்பட்டன என, துபாய் மக்கள் துயரத்துடன் பேசியபடியே இருக்கின்றனர்.பாலைவன நாட்டில், ஓர் ஆண்டு முழுதும் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டி தீர்த்துள்ளது. துபாயில் மட்டுமல்ல; இனி, உலகம் முழுக்க இப்படி தான் நடக்கும் என்று, சூழலியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.கடல் நிலப்பரப்பின் அடியில், 'கோபால்ட், நிக்கல், காப்பர், மெக்னிசீயம்' ஆகிய நான்கு உலோகங்கள் பரவி இருக்கும். அவற்றை எப்படி எடுப்பது என்பது தொடர்பான தொழில்நுட்பத்தை, என்.ஐ.ஓ.டி., கண்டுபிடித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் கடலும் வெப்பமயமாகிறது; ஆழ்கடலும் வெப்பமயமாகிறது. ஆழ்கடலில் வெப்பமயம் அதிகமாவதால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

'மெரைன் ஹீட் வேவ்'

தற்போது கடலில், 2 கி.மீ., ஆழம் வரை எவ்வளவு வெப்பம் உள்ளது; வேறு என்னென்ன மாறுபாடு ஏற்படுகிறது என, ஒவ்வொரு 10 நாளைக்கும் ஒரு முறை இந்தியா முழுதும் ஆய்வு செய்கிறோம்.'மெரைன் ஹீட் வேவ்' அடிக்கடி வருவதால், அங்கு மீன்கள் வளராது; வராது. எங்கெங்கு மெரைன் ஹீட் வேவ் ஏற்படுகிறது; எப்போதெல்லாம் வரும் என்பதை கணித்து வருகிறோம். முன்பெல்லாம், சில நாட்களுக்கு வரும். தற்போது, மூன்று வாரங்கள் வருகிறது. கடல் வெப்ப அலை ஏற்படுவதால், இனி வரும் காலங்களில் உருவாகும் புயல்கள் வலிமை பெற்றதாக மாறும். மழை மேகங்களில் தண்ணீரை சுமக்கும் திறன் அதிகரித்து உள்ளது. கடந்த காலங்களில் மேகங்களின் பரப்பளவு அதிகம் இருக்கும்; நீரின் அளவு குறைவாக இருக்கும். வெப்ப அலை உயர்வால் மேகங்களின் பரப்பளவு குறைந்து, அதிகளவு நீரை கொண்ட மேகங்கள் உருவாகின்றன. இதன் காரணமாகவே, ஒரு குறிப்பிட்ட இடத்தில், அதிக அளவு மழை பொழிவு ஏற்படுகிறது. இனி வரும் காலங்களில் மெரைன் ஹீட் வேவ் காரணமாக, புயல்கள் மிகுந்த வலிமை பெற்றதாக இருக்கும். கடற்பகுதியில் உருவாகும் புயல், மெரைன் ஹீட் வேவ் உருவாகி இருக்கக்கூடிய பகுதிகளை கடந்து செல்லும் போது, மிகுந்த வலிமை பெற்றதாக உருவெடுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sridhar
நவ 10, 2024 13:04

இவங்கெல்லாம் படிச்சவங்கதானா? கடல் வெப்பத்தை அமெரிக்கா காரனாலேயே இன்னும் 10 மேட்டருக்கு கீழே அளவிடமுடியல அதுவும் 1 % கடல் பரப்புலதான் வெப்பத்தை அளக்கும் கருவிகளை வச்சுருக்காங்க. இவுனுக என்னமோ முழுசா எல்லா விவரமும் தெரிஞ்ச மாதிரி அடிச்சு விட்றானுங்க யோவ், ஜோசியம் சொல்ற வேலையெல்லாம் விட்டுட்டு அந்த மாதிரி புயல் வந்தா என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கணும்ங்கறத பத்தி மட்டும் திட்டம் போடுங்க. மத்தபடி இயற்க்கை அதன் போக்கில் செயல்படும்.


ramesh
நவ 10, 2024 12:32

இந்த ஆண்டு நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் வந்து விடுமோ என்ற பயம் வருகிறது


Kasimani Baskaran
நவ 10, 2024 06:41

நூற்றுக்கணக்கில் படகுகள், மிதவைகள், அவசர உதவிக்கு மோட்டார் பைக்குகள் போன்றவை தயாராக இருப்பதால் சென்னை வாசிகளுக்கு கவலை இல்லை. பாலங்கள் அனைத்தையும் கார் பார்க்காக மாற்றிவிட்டால் கார்களுக்கு பாதுகாப்பு.


முக்கிய வீடியோ