அ.தி.மு.க.,வில் ஏராளமான அணிகள்; துணை முதல்வர் உதயநிதி கிண்டல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சாத்துார்: அ.தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா, தீபா, தீபாவின் டிரைவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அணி என பல அணிகள் உள்ளது என துணை முதல்வர் உதயநிதி கிண்டல் செய்துள்ளார்.சாத்துாரில் நடந்த சட்டசபை தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: தி.மு.க. கூட்டணி உடைந்து விடாதா என ஏங்கி தமிழகத்துக்கு எதிராக பல்வேறு சதி திட்டங்களை தீட்டி, பா.ஜ., செயல்படுத்தி வருகிறது. இவற்றை முதல்வர் ஸ்டாலின், தனது இடது கையால் சமாளித்து வருகிறார். இதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 2021ல் பா.ஜ.,வின் அடிமை கட்சியிடம் இருந்து தமிழகத்தை மீட்டோம். 2026ல் மீண்டும் அடிமை கட்சியின் ஆட்சி ஏற்பட்டு விடக்கூடாது.அ.தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா, தீபா, தீபாவின் டிரைவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அணி என பல அணிகள் உள்ளது. சாத்துார் சட்டசபை தொகுதியில் கூட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஒரு அணி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜவர்மன் தலைமையில் மற்றொரு அணி செயல்படுகிறது.இரு நாட்களுக்கு முன், ஜெயலட்சுமி என்பவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு என்றும், இனி அ.தி.மு.க., தனது கட்டுப்பாட்டில் என தெரிவித்தார். இவர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சென்று சந்தித்து வந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வில் 'தினமலர்' நாளிதழ் செய்திகளுக்கு முன்னுரிமை
விருதுநகரில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில் நாளிதழ்களில் வந்த செய்தியை வைத்து, துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். இதில், 'தினமலர்' நாளிதழில் கடந்த ஒரு வாரம் வந்த செய்திகள் பற்றி கேட்டவர், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின், ரோடு, குடிநீர் வசதி தொடர்பான பிரச்னைகளை கேட்டார். மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். கடந்த 2023ல் நடந்த கூட்டத்தின் போதும், உதயநிதியின் ஆய்வு பாராட்டுக்குரியதாக பேசப்பட்டது. அதன் எதிரொலியாக நேற்று முன்தினத்தில் இருந்தே, தினமலர் நாளிதழ் செய்திகளை அதிகாரிகள் கத்தரித்து வைத்து, பதில் தயாரித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், தற்போதும் தினமலர் நாளிதழை சுட்டி காட்டி மக்கள் பிரச்னைகளை கேட்டுள்ளார்.