சென்னை: தமிழகத்தில், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 11 மருத்துவ கல்லுாரிகளுக்கான கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கூறப்படும் புகாரில் ஆதாரம் இல்லை. அதனால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.11 மருத்துவ கல்லுாரிகள்
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், திருவள்ளூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவ கல்லுாரிகள் கட்டப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0cwbg5l3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அவரது வசம் பொதுப்பணித் துறை இருந்த காலத்தில், மத்திய அரசின் 60 சதவீதம், மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் மருத்துவ கல்லுாரிகள் கட்டப்பட்டன. இந்த கல்லுாரிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை. மருத்துவ கல்லுாரி களுக்கான கட்டடங்கள் கட்டியதில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேட்டில், அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு உள்ளதால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அரசாணை
சி.பி.ஐ., உள்ளிட்ட மத்திய புலன் விசாரணை அமைப்புகள் விசாரணை செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற்று, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்து, நான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடியதாவது: மனுதாரரின் புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விரிவான விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில், புகாரில் ஆதாரம் இல்லை என தெரியவந்தது. அந்த விசாரணை அறிக்கை, விஜிலென்ஸ் கமிஷனரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவரும் அந்த அறிக்கையை மாநில அரசுக்கு சமர்ப்பித்தார். மாநில அரசும், அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து நீதிபதிகள், 'முகாந்திரம் இல்லை என புகார் முடித்து வைக்கப்பட்டதை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியுமா என்பது குறித்து, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி மனுதாரர் விளக்கம் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர். அடுத்த விசாரணையை, ஜன., 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
பழனிசாமிக்கு தி.மு.க., அரசு நற்சான்றிதழ்
'அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட 11 மருத்துவ கல்லுாரிகளில் முறைகேடு எதுவும் இல்லை என தமிழக அரசு கூறியிருப்பது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமிக்கு, தி.மு.க., அரசு அளித்துள்ள நற்சான்றிதழ்' என, அ.தி.மு.க., கூறியுள்ளது.இது தொடர்பாக, அ.தி.மு.க., வெளியிட் டுள்ள அறிக்கை:பழனிசாமி முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த 11 மருத்துவ கல்லுாரிகளில் முறைகேடு என தி.மு.க., வைத்த பொய் குற்றச்சாட்டில், துளிகூட முகாந்திரம் இல்லை என்று தற்போது தி.மு.க., அரசே தெரிவித்துள்ளது. முந்தைய பழனிசாமி அரசுக்கு, தி.மு.க., அரசு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.உயர்தர மருத்துவ கட்டுமானத்தை மக்களிடம் சேர்த்து, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் 11 மருத்துவ கல்லுாரிகள் திட்டத்தில் கூட, தங்கள் அற்ப அரசியலுக்காக பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியது தி.மு.க.,இத்தகைய சதி திட்டங்களால், மக்களுக்காக உழைக்கும் நேர்மையான தலைவரான பழனிசாமியை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை தெரிந்து கொள்ளட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.