திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
சென்னை:'ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் திரைப்படத்துக்கு, 'ப்ரோ கோட்' என்ற பெயரை பயன்படுத்துவதை தடுக்கக்கூடாது' என, டில்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரவி மோகன் தயாரித்து நடிக்கும், 'ப்ரோ கோட்' திரைப்படம், 2026ல் திரைக்கு வர உள்ளது. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் முன்னோட்டம், ஆகஸ்ட் 27ல் வெளியானது. இந்நிலையில், 'ப்ரோ கோட்' என்ற பெயருக்கு, தங்களது நிறுவனம் பதிப்புரிமை பெற்றுள்ளதால், அதை பயன்படுத்தக் கூடாது என, டில்லியைச் சேர்ந்த, 'இண்டோ வேவ்ஸ்' என்ற மதுபான உற்பத்தி நிறுவனம் தரப்பில், படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இதையடுத்து, 'ப்ரோ கோட்' பெயரை பயன்படுத்துவதை தடுக்கக்கூடாது என, டில்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிடக்கோரி, ரவி மோகன் ஸ்டூடியோஸ் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. 'ப்ரோ கோட்' என்ற பெயரை, திரைப்படத்துக்கு பயன்படுத்துவதை தடுக்கக் கூடாது' என, டில்லியைச் சேர்ந்த மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு, மூன்று வார கால இடைக்கால தடை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.