தி.மு.க.,வால் கட்சி வளர்ச்சி திருமாவளவன் பெருமிதம்
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா வளவன் அளித்த பேட்டி: 'அ.தி.மு.க.,வை பா.ஜ., விழுங்கி விடும்' என, பொறுப்புணர்வுடனும், கவலையோடும், அக்கட்சி பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும் சுட்டிக் காட்டினோம். ஆனால், அதை அப்படியே திருப்பி, 'வி.சி.,யை, தி.மு.க., விழுங்கிவிடும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசி இருக்கிறார். அவருக்கு இப்படித்தான் பேச வேண்டும் என, யாரோ சொல்லி தருகின்றனர். அவராகவே இப்படி சொல்கிறார் என்பதை ஏற்க முடியவில்லை. அ.தி.மு.க.,வுக்கு எதிராக நான் பேசுகிறேன் என, அவர் நினைப்பதாகக் கருதுகிறேன். நான் எதற்காக சொல்கிறேன் என்பதை கட்டாயம் நன்கு உணர்வர். சேராத இடத்தில் சேர்ந்திருக்கும் சூழலில், இப்படியெல்லாம் பேசுகிறார். இது குறித்து வருத்தப்பட ஏதுமில்லை. கடந்த 2001ல் இருந்து, ஓரிரு பொதுத் தேர்தல்களை தவிர, தி.மு.க.,வுடன் தான் வி.சி., பயணிக்கிறது; மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்து, மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறது. தி.மு.க.,வால் வளர்ச்சி அடைந்திருக்கிறதே தவிர, வீழ்ச்சி அடையவில்லை. இதை, பழனிசாமி திரித்து பேசுவதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.