உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 6) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

சிறுவன் கைது

ஈரோடு மாவட்டம், சிவகிரியை சேர்ந்தவர், 15 வயது பள்ளி மாணவி; இவர் கடந்த, 3ல் மாயமானார். பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன், மாணவியை கடத்திச் சென்றது தெரிந்தது.சிறுவன், சிறுமி இருவரும், டூ - வீலரில் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். பரமத்தி போலீசார், அவர்களை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். சிறுமியை கடத்தியதாக சிறுவனை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

'சில்மிஷ' வாலிபர்களுக்கு வலை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே தெற்கு திருநாளுர் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 9 வயது மகள், திருநாளுரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 4ம் வகுப்பு படிக்கிறார். சிறுமி வழக்கம் போல நேற்று காலை, 8:30 மணிக்கு வீட்டில் இருந்து, தன் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, எதிரே பைக்கில், முகத்தில் கர்சீப் கட்டிய இருவர், சிறுமியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்து பைக்கில் கடத்த முயன்றனர். தன்னை பிடித்திருந்தவரின் கையை கடித்து விட்டு, சிறுமி அங்கிருந்து தப்பி, பள்ளிக்கு வந்து, சம்பவம் குறித்து தலைமையாசிரியரிடம் கூறினார்.தலைமையாசிரியர் புகாரின்படி, சிறுமிக்கு தொல்லை தந்து, கடத்த முயன்ற வாலிபர்கள் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபருக்கு '20 ஆண்டு'

ஈரோடு, சித்தோடு மாகாளியம்மன் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் வசிக்கும் சூர்யா, 29; டிரைவர். இவருக்கு ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த, 2020 மார்ச் 6ல், சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை காட்டி, சித்தோட்டில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்தார்.சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, சூர்யாவை போக்சோ வழக்கில், ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சூர்யாவுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

4 வாலிபர்கள் போக்சோவில் கைது

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் பிரசாந்த், 26. இவர், ஜோலார்பேட்டை அரசு பள்ளியில் படிக்கும், 17 வயது மாணவியை, தினமும் வழியில் மடக்கி, தன்னை காதலிக்க வற்புறுத்தி வந்தார். மாணவி மறுத்து வந்த நிலையில், வாலிபருக்கு ஆதரவாக அவரது நண்பர்களான, அச்சமங்கலம் முக்கேஷ், 27, பரத், 25, மற்றும் புள்ளானேரி மேகநாதன், 25, ஆகிய மூன்று பேரும், மாணவியிடம், பிரசாந்தை காதலிக்க வற்புறுத்தினர். இது குறித்து மாணவி, தன் பெற்றோரிடம் கூறினார். அவர்கள் புகார் படி, ஜோலார்பேட்டை போலீசார் விசாரித்து, பிரசாந்த் உள்ளிட்ட, 4 பேரை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !