உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவமனைக்கு வருவோர் இனி நோயாளி அல்ல; மருத்துவ பயனாளி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மருத்துவமனைக்கு வருவோர் இனி நோயாளி அல்ல; மருத்துவ பயனாளி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:“மருத்துவமனைக்கு வருவோர் நோயாளிகள் அல்ல; அவர்களை இனி, மருத்துவ பயனாளிகளாக கருத வேண்டும்,” என, முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழகம் முழுதும், 1,256 இடங்களில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு முகாமிலும், 200 மருத்துவ பணியாளர்கள் வாயிலாக, 17 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. அதன்படி, சென்னை சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ - இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாமை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். பின், அவர் பேசியதாவது: நான் நன்றாக இருக்கிறேன். சில நாட்களுக்கு முன் காலையில், 'வாக்கிங்' சென்ற போது, லேசாக தலைச்சுற்றல் இருந்தது. மருத்துவமனைக்கு சென்ற போது, டாக்டர்கள் சில பரிசோதனைகள் செய்ய அறிவுறுத்தினர். கோப்புகள் மருத்துவமனையில் இருந்தாலும், அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி, சில அவசர கோப்புகளை கவனித்தேன். உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் இருந்தாலும், மக்கள் பணியாற்ற வேண்டும் என்பது தான் என் விருப்பம். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய போதும், தலைமை செயலகம் சென்றேன். என் செயலர்கள் கூட, 'வெளி நிகழ்ச்சிகளை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கலாம்' என்றனர். மக்களை சந்தித்தால் தான் எனக்கு உற்சாகம் வரும்; உடலில் நோய் இருந்தால் சரியாகி விடும் என வந்திருக்கிறேன். மருத்துவ துறையில், 'மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48, பாதம் பாதுகாப்போம், இதயம் காப்போம்' உள்ளிட்ட பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை, ஐக்கிய நாடுகள் சபையே விருது கொடுத்து பாராட்டி உள்ளது. தற்போது, 'உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டங்கள் வாயிலாக, மக்களின் தேவையை புரிந்து, அவர்களின் எதிர்பார்பை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறோம். முகாமில் எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள் அனைத்தும், மக்களிடமே வழங்கப்படும். இவை, அவர்களின் மருத்துவ சிகிச்சைகளுக்கு பயன்படும். நகர்ப்புறங்களில் வசதியானவர்களுக்கு கிடைக்கும் மருத்துவ சேவை, கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய, பாமர மக்களுக்கும் கிடைக்க வேண்டும்; அதை உறுதி செய்வோம். சிறிய பிரச்னை தமிழகத்தில், மருத்துவ உள்கட்டமைப்பு வசதி என்பது, கிராமப்புறங்கள் வரை பரவலாகி விட்டது. மருத்துவமனைகளை நோக்கி வர முடியாதவர்களுக்கு பயன் தரும் வகையில், முகாம்கள் நடத்துகிறோம். திராவிடர் கழக தலைவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், 'மருத்துவமனைக்கு வருவோரை நோயாளிகள் என அழைக்கக்கூடாது' என்று குறிப்பிட்டிருந்தார்; அதுவும் சரிதான். ஏனென்றால், எல்லாருக்கும் உடலில் ஏதாவது ஒரு சிறிய பிரச்னை இருக்கும். அதற்காக, அவர்களை நோயாளி என்று சொல்லக்கூடாது. டாக்டர்களையும், மருத்துவமனைகளையும் நாடி வருவோரை, 'மருத்துவ பயனாளிகளாக' நாம் பார்க்க வேண்டும். இந்த முகாம்களுக்கு வருவோரும், மருத்துவ பயனாளிகள் தான். நாம் குடும்ப உறுப்பினர்களை எப்படி கவனித்து கொள்வோமோ, அதேபோல, மக்களையும் அக்கறையுடன் கவனித்து கொள்ள வேண்டும். இந்த முகாம் குறித்து, மற்றவர்களுக்கு தெரியப்படுத்தலாம். உங்களால் ஒருவருடைய உயிர் காப்பாற்றப்படலாம். ஒரு குடும்பத்தின் எதிர்காலம் பாதுகாக்கப்படலாம். தமிழகம் எதிலும் முதலிடம் என்பது, என் விருப்பம். மக்களின் உடல் நலன் காப்பதிலும், தமிழகம் முன்னிலையில் தான் உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் விழாவில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: டில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தலைமையில், சுகாதாரத்துறை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 2024ம் ஆண்டில் உடல் உறுப்புகள் தானத்தில், தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்ததற்கான விருதை, தமிழக உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார் . எட்டாவது முறையாக, இவ்விருதை தமிழகம் பெற்றுள்ளது. மேலும், மூளைச்சாவு அடைந்த நோயாளிகளை பராமரிப்பதில் சிறந்து விளங்கியதற்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும், 268 பேரின் உடல் உறுப்புகளை தானம் பெற்று, ஆயிரக்கணக்கான நபர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளனர். உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் உடலுக்கு, அரசு மரியாதை வழங்கப்படும் என, 2023 செப்., 23ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பின், 479 பேர் உடல் உறுப்பு தானம் அளித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !