திருச்சி: நேபாளம் விமான விபத்தில் பலியான திருச்சியைச் சேர்ந்த, 8 பேருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என, பல்லாயிரக்கணக்கானோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். அகில இந்திய கட்டுனர் சங்கம் நிர்வாகப் பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க திருச்சியைச் சேர்ந்த கட்டுனர் சங்க தலைவர் மணிமாறன் (58) தலைமையில், ரோஹினி பில்டர்ஸ் உரிமையாளர் மருதாச்சலம் (68), ஜோதி ஃபைல் பவுன்டேஷன் உரிமையாளர் தியாகராஜன் (48), மெர்க்குரி உரிமையாளர் தனசேகரன் (44), பாலக்கரை மாரியப்பா ஜவுளிக்கடை உரிமையாளர் கிருஷ்ணன் (72), மீனா பிராப்பர்டீஸ் டெவலப்பர்ஸ் உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் (50), கான்ட்ராக்டர் காட்டூர் மகாலிங்கம் (55), கட்டிட மதிப்பீட்டாளர் கனகசபேசன் (70) ஆகியோர் உள்பட, 12 பேர் டில்லி சென்றனர்.
கூட்டம் முடிந்த பின், திரிசங்கு, கவுதமன், சரவணன், புகழேந்தி ஆகிய நால்வர் திருச்சிக்கு வந்தனர். மற்ற எட்டு பேரும், 24ம் தேதி நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கு சென்றனர். சுற்றுலா வந்த விவரத்தை திருச்சியில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். புத்தா ஏர்வேஸ் விமானம் மூலம் எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிப்பார்க்க முடிவு செய்தனர்.
அங்குள்ள ஏஜன்ட் மூலம் புக் செய்தனர். 26ம் தேதி தான் அவர்களுக்கு 'டிக்கெட்' கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜா என்பவரது குடும்பத்தினர் எட்டு டிக்கெட்டுகளை ரத்து செய்ததால், ஒரு நாள் முன்னதாக, 25ம் தேதி காலை எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிப்பார்க்க புறப்பட்டனர்.
எவரெஸ்ட் சிகரத்தை சுற்றிபார்த்துவிட்டு திரும்பும் போது, மோசமான வானிலை காரணமாக லலித்பூர் மாவட்டத்தில் பிஷன்கு நாராயணன் கோவில் அருகே கோட்தண்டா என்ற மலையில் விமானம் மோதி தீப்பிடித்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், 19 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்த விபத்தில் பலியான திருச்சி கட்டுனர் சங்க நிர்வாகிகள் உடலை திருச்சிக்கு கொண்டு வர தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். முதல்வர் உத்தரவின்பேரில், திருச்சி எம்.பி., குமார் தலைமையில், பிரதிநிதிகள், உறவினர்கள் நேபாளம் சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு காத்மாண்டுவிலிருந்து டில்லிக்கும், டில்லியிலிருந்து சென்னைக்கும் விமானம் மூலம் சடலங்களை கொண்டு வந்தனர். சென்னையிலிருந்து நான்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் திருச்சிக்கு நேற்று காலை 7.10 மணிக்கு கொண்டுவரப்பட்டு, தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
குடும்பத்தினர், உறவினர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க., சார்பில் அமைச்சர் சிவபதி, எம்.பி.,குமார், எம்.எல்.ஏ., மனோகரன், மேற்கு தொகுதி வேட்பாளர் பரஞ்ஜோதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க., சார்பில் எம்.பி.,க்கள் செல்வகணபதி, விஜயன், முன்னாள் அமைச்சர்கள் வேலு, செல்வராஜ், ரகுபதி, முன்னாள் எம்.எல்.ஏ., பரணிகுமார், சேகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல், பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்க நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். காலை 8.30 மணிக்கு உடல்கள் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விமான விபத்தில் இறந்த, 8 பேரில் உடல்களில், 6 பேர் உடல் திருச்சியில் நேற்று இறுதி சடங்குடன் அடக்கம் செய்யப்பட்டது.
மீனாட்சிசுந்தரம் உடல் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதில், கனகசபேசனின் மகன் பாஸ்கரன் அமெரிக்காவிலிருந்து இன்று வருவதால் அவரது உடல் மட்டும் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
பெயர் மாற்றத்தால் குழப்பம் : திருச்சிக்கு வந்த ஆம்புலன்ஸிலிருந்து 8 பேரின் உடல்களை இறக்கினர். அப்போது, மீனாட்சி சுந்தரத்தின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியில், அவரது உடலுக்கு பதில், தனசேகரின் உடல் இருந்தது. இதையடுத்து, பெட்டி மீது எழுதி ஒட்டப்பட்டிருந்த 'லேபிளை' மாற்றினர். இதனால், அனைத்து பெட்டிகளும் திறந்து பார்ந்து, அந்தந்த பெயரில் உள்ள உடல்கள் தான் இருக்கிறதா? என்பது உறுதி செய்யப்பட்டது.