தென் மாவட்ட விரைவு ரயில்களின் பயண நேரம் 30 நிமிடம் குறையும்
சென்னை: 'தென் மாவட் ட விரைவு ரயில்களின் பயண நேரம், 15 முதல் 30 நிமிடங்கள் வரை குறைய உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தெற்கு ரயில்வேயில் ஆண்டுதோறும் வெளியிடப்படும், விரைவு மற்றும் பயணியர் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை, கடந்த சில ஆண்டுகளாக டிச., இறுதியில் வெளியிடப்படுகிறது. புதிய தடத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கம், புதிய பயணியர் ரயில்கள் இயக்கம், கூடுதல் நிறுத்தம் வழங்குவது உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தி, எம்.பி.க்கள்., பயணியர் நல சங்க நிர்வாகிகள் சார்பில், தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 2026ம் ஆண்டிற்கான விரைவு, பயணியர் ரயில்களின், புதிய கால அட்டவணை தயாரிக்கும் பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்களின் தாமதத்தை குறைக்க, விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, பல்வேறு வழித்தடங்களில் ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் ரயில்கள் இயக்கம் குறித்து ஏற்கனவே வந்த மனுக்களை பரிசீலனை செய்து வருகிறோம். அடுத்த ஆண்டுக்கான ரயில் கால அட்டவணை தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. அடுத்த மாதம், புதிய கால அட்டவணை வெளியிடப்படும். சில விரைவு ரயில்களின் பயண நேரம் தற்போதுள்ளதை விட, 15 முதல் 30 நிமிடங்கள் வரை குறையும். இந்த பட்டியலில், தென்மாவட்ட விரைவு ரயில்களும் இடம் பெறும். ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்படும்போது, அதன் விபரம், பயணியரின் மொபைல் போனுக்கு அனுப்பப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.