மூட்டைகளை இறக்க ஆளில்லை 5 நாட்களாக காத்திருக்கும் லாரிகள்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், குறுவை அறுவடை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கிருந்து, திறந்தவெளி மற்றும் சேமிப்பு கிடங்குகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ரயில் மற்றும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. நெல் மூட்டைகளை அனுப்ப 1,250 லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், லாரிகளில் மூட்டைகளை ஏற்றி இறக்க, தொழிலாளர்கள் பாற்றாக்குறை உள்ளதால், சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கப்படும் லாரிகள், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தான் இயக்கப்படுகின்றன. தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு, தனியாருக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு மற்றும் சென்னம்பட்டி, புனல்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்குகள் முன், ஏராளமான லாரிகள் நெல் மூட்டைகளோடு காத்திருக்கின்றன. இந்த மூட்டைகள் இறக்கப்படாததால் லாரி டிரைவர்கள் காத்திருக்கின்றனர். அதனால், லாரிகளில் நெல் மூட்டைகளை ஏற்றவும், இறக்கவும், கூடுதலாக தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து லாரி டிரைவர்கள் கூறியதாவது: நெல் கிடங்குகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் முறையாக வேலைக்கு வருவது இல்லை. இதை, நுகர்பொருள் வாணிப கழகமும் கண்டுகொள்வதில்லை. உதாரணமாக, ஒரு கிடங்கிற்கு, 40 தொழிலாளர்கள் என்றால், 20 பேர் தான் ஒரு நாளைக்கு பணிக்கு வருகின்றனர். அதுமட்டுமின்றி, கிடங்கில் இருந்து நெல்லை ஏற்றுவதற்கான பணிகளுக்கே தொழிலாளர்கள் சென்று விடுவதால், லாரிகளில் உள்ள நெல்லை இறக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், டிரைவர்கள் பல நாட்களாக லாரிகளில் மூட்டைகளை வைத்துக் கொண்டு காத்திருக்க வேண் டிய சூழல் உள்ளது. அரசு சார்பில் வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்களை வரவழைத்து பணிகளை துரிதபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.