வாஷிங்டன்: அமெரிக்காவில் 43 நாட்கள் அரசு நிர்வாகம் முடக்கம் முடிவுக்கு வந்தது. அரசு நிதி மசோதாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.அமெரிக்காவில் அரசு துறைகளுக்கான பட்ஜெட், அக்., 1 முதல் அமலுக்கு வரும். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், முந்தைய அரசின் திட்டங்கள் நீக்கப்பட்டதால், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஒப்புதல் தரவில்லை. தற்போது செனட் சபையில் ஆளும் குடியரசு கட்சிக்கு, 53 பேரும், ஜனநாயக கட்சிக்கு, 47 பேரும் உள்ளனர். குறைந்தபட்சம், 60 பேரின் ஆதரவு தேவை என்பதால் மசோதா நிறைவேறவில்லை.இதையடுத்து நிதி முடக்கம் ஏற்பட்டதால், பல துறைகள், சேவைகள் முடங்கின. பல அரசு ஊழியர்கள் சம்பளமில்லாமல் விடுமுறையில் அனுப்பப்பட்டனர். நிதி இல்லாததுடன், ஊழியர் பற்றாக்குறையும் சேர்ந்ததால் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் அதிகபட்சமாக, 43 நாட்களாக இந்த நிதி முடக்கம் நீடிக்கிறது.இந்நிலையில், தங்களின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், ஜனநாயக கட்சியினரின் சிலர் ஆதரவு அளித்ததால், மசோதா செனட் சபையில் நிறைவேறியுள்ளது. அடுத்ததாக, பிரதிநிதிகள் சபையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவில் அதிபர் டிரம்ப் விரைவில் கையெழுத்திட்டார். 43 நாட்களுக்கு அரசு நிர்வாகம் முடக்கம் முடிவுக்கு வந்தது.மசோதாவில் கையெழுத்திட்ட பிறகு அதிபர் டிரம்ப் கூறியதாவது: சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைப் பறிக்கும் முயற்சியில், உள்ள ஜனநாயகக் கட்சியினர் கடந்த 43 நாட்களாக, அமெரிக்க அரசாங்கத்தை முடக்கினர். இன்று, மிரட்டி பணம் பறிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம், என்றார். தற்போதைய பட்ஜெட்டில், சில துறைகளுக்கு 2026 ஜன., 30ம் தேதி வரை மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால், மீண்டும் மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.