கரூர் சம்பவம் தொடர்பாக த.வெ.க., நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்; அக்.3ல் விசாரணை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மதுரை: கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, சி.பி.ஐ., அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, விஜய் தரப்பினர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை அக்டோபர் 3ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது. கரூரில் நேற்று முன்தினம், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இந்த சம்பவம், நாடு முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் திட்டமிட்ட சதி என த.வெ.க., தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xy619pk6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தவெக கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் அறிவழகன் தலைமையிலான வழக்கறிஞர்கள் அணியினர், இன்று (செப் 29) இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை தேவை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.ஆனால் அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ''தசரா பண்டிகை விடுமுறை காலம் என்பதால் ஏற்கனவே அறிவித்தபடி மனுக்களை நாளை (செப். 30) தாக்கல் செய்ய வேண்டும். அக். 3ல் எடுத்துக் கொள்ளப்படும்'' என நீதிமன்ற பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினமே விசாரணை தொடங்க வாய்ப்புள்ளது.தவெக வழக்கறிஞர் பேட்டி
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்த பிறகு, தவெக வழக்கறிஞர் அறிவழகன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: கரூரில் சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தடயங்களை அழிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. அங்கு தடியடி நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மிகப்பெரிய சதி வலை பின்னப்பட்டுள்ளது.கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அவசர கதியில் உடற்கூராய்வு செய்தது ஏன்? கரூர் கூட்டத்தில் போலீசாரின் நிபந்தனைகள் மீறப்படவில்லை. எல்லா இடத்திலும் குடிநீர் கொடுக்கப்பட்டது. திமுகவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் ஏதோ பெரிய சம்பவம் நடக்கப்போகிறது என முன்கூட்டியே சொல்லி இருக்கிறார்கள். இதனால் இதில் சதி இருக்கிறது என மனுத்தாக்கல் செய்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.