| ADDED : நவ 01, 2024 04:55 AM
சென்னை: ''பெரும்பான்மையான மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்ல, முதல்வர் ஸ்டாலின் தயக்கம் காட்டுவது ஏன்?'' என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி: நரகாசுரனை அழித்த நாளை, ஆண்டுதோறும் தீபாவளியாக கொண்டாடி வருகிறோம். அதேபோல, தி.மு.க., என்ற நரகாசுரனை, 2026 சட்டசபை தேர்தல் வாயிலாக, தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அந்த ஆண்டு தீபாவளியை, ஒவ்வொரு தமிழனும் சிறப்பாக கொண்டாட வேண்டும். அதற்கு அனைவரும், இன்றே சபதம் ஏற்க வேண்டும். துணை முதல்வர் உதயநிதி, நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இவ்வளவு காலமாக தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்த தி.மு.க., தரப்பில் இருந்து, முதல் முறையாக வாய் திறந்துள்ளனர். அதற்காக, அவர்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. முதல்வராக இருப்பவர், பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல தயக்கம் காட்டுவது ஏன்? இனியாவது எல்லோரையும் சமமாக மதித்து, அனைத்து பண்டிகைக்கும் முதல்வர் வாழ்த்துச் சொல்வார் என, நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.