உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ; அங்கீகாரம்; சுற்றுலா மேம்பாடு, மத்திய நிதியுதவி கிடைக்க வாய்ப்பு

செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ; அங்கீகாரம்; சுற்றுலா மேம்பாடு, மத்திய நிதியுதவி கிடைக்க வாய்ப்பு

செஞ்சி : செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கோட்டை அமைந்துள்ளது. மூன்று மலைகளை இணைத்து, 1200 ஏக்கர் பரப்பளவில் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களுடன், 80 அடி அகலம் உள்ள அகழிகளுடன், 800 அடி உயர மலை உச்சியில் கோட்டை கட்டி உள்ளனர்.கி.பி., 1190ம் ஆண்டு கோணார் வம்சத்தினர் செஞ்சி கோட்டையை முதன் முதலில் கட்டினர். கி.பி., 1320 வரை கோணார்கள் ஆட்சி தொடர்ந்தது. கி.பி., 1321 முதல் 1330 வரை குறும்பர்களும், கி.பி.,1331 முதல் 1337 வரை ஒய்ச்சாலர்களும் ஆட்சி செய்தனர்.கி.பி.,1338 முதல் 1396 வரை விஜயநகர மன்னர்கள்; கி.பி., 1397 முதல் 1647 வரை நாயக்க மன்னர்கள்; கி.பி.,1648 முதல் 1677 வரை முகமதியர்கள்; கி.பி., 1678 முதல் 1697 வரை சத்ரபதி சிவாஜியின் மராட்டியர்கள் ஆண்டனர்.கி.பி., 1698 முதல் 1749 வரை மொகலாயர்கள்; கி.பி., 1750 முதல் 1770 வரை பிரெஞ்சுக்காரர்கள்; கி.பி., 1770 முதல் 1780 வரை ஆங்கிலேயர்கள்; செஞ்சி கோட்டையை ஆட்சி செய்தனர்.கி.பி., 1698 முதல் 1714 வரை முகமதியர்கள் ஆட்சியில், சொருப்சிங் மற்றும் அவரது மகனான ராஜா தேசிங்கு மன்னர்களாக இருந்தனர். இதில் செஞ்சி கோட்டையை, 19 ஆண்டுகள் மராட்டியர்கள் ஆட்சி செய்தனர்.சத்ரபதி சிவாஜி ஆட்சியின் போது முக்கிய ராணுவ கேந்திரமாக விளங்கிய மஹாராஷ்டிராவில் உள்ள 11 கோட்டைகள், தமிழகத்தில் உள்ள செஞ்சி கோட்டை என மொத்தம் 12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என, கடந்த ஆண்டு மத்திய அரசு பரிந்துரை செய்தது.இதையடுத்து கடந்த, 2024,ம் ஆண்டு செப்., 27ம் தேதி 'யுனெஸ்கோ' பிரதிநிதி செஞ்சி கோட்டையில் ஆய்வு செய்தார். எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு நிர்வாகம், காவல் துறை, வனத்துறை இந்திய தொல்லியல் துறையின் கூட்டு கூட்டத்தை நடத்தி, மக்கள் கருத்தை கேட்டனர்.இந்த அறிக்கையின் அடிப்படையில், பிரான்சில் உள்ள யுனெஸ்கோ தலைமையகம் நேற்று முன்தினம் செஞ்சி கோட்டை உட்பட, 12 கோட்டைகளை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.தமிழகத்தில் ஏற்கனவே மாமல்லபுரம் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோவில், ஊட்டி மலை ரயில் ஆகியவை உலக பாரம்பரிய சின்னங்களாக உள்ளன. இப்பட்டியலில் செஞ்சி கோட்டை, 6வதாக இடம் பெற்றுள்ளது.

செஞ்சி கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு இருப்பதால் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டையை மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து மேம்படுத்தும்.இதனால் செஞ்சி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான படகு சவாரி, ரோப்கார் திட்டங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பாரதி
ஜூலை 15, 2025 13:04

புகழ்பெற்ற தற்போதைய செஞ்சி கோட்டை கிபி 15 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது...