உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பிரசாரத்துக்கு குழந்தைகளை  பயன்படுத்துவது தவறு

 பிரசாரத்துக்கு குழந்தைகளை  பயன்படுத்துவது தவறு

சென்னை: 'தேர்தல் பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தவறு' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடலுார் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் எல்.வாசுகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: சட்டசபை தேர்தலின்போது தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக புகார்கள் கூறப்படுகின்றன. மேலும், பிரசாரத்தின் போது தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஓட்டு போடுமாறு பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, குழந்தைகள் மீது உணர்வுப்பூர்வமான செல்வாக்கை அக்கட்சி தலைவர் விஜய் செலுத்தி உள்ளார். இது தொடர்பாக, விசாரணை நடத்த, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''பிரசாரத்திற்கு குழந்தைகளை பயன்படுத்துவது தவறு தானே; நான் ஒன்றை கூற விரும்புகிறேன். குடும்ப மருத்துவர் ஒருவர் ஓட்டளிக்கச் சென்றபோது, அவரது பேரக்குழந்தை விசில் சின்னத்துக்கு ஓட்டு போடும்படி அழுத்தம் கொடுத்தது,'' என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., மற்றும் தேர்தல் கமிஷன் சார்பில் இம்மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை முதல் வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Dr S Venkatraman
ஜூன் 05, 2026 18:27

அதிகார பூர்வமாக இதை நிரூபிக்க முடியாது. சட்டங்களும் இல்லை.


பாரதி
மே 31, 2026 14:45

தற்குறிகளுக்கு ஒரு மண்ணும் தெரியாது....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை