பூத் செலவு தொகையை அதிகரிக்க வி.ஏ.ஓ.,க்கள் கோரிக்கை
சென்னை: ஓட்டுச்சாவடி பணிகளுக்கான செலவு தொகையை உயர்த்துமாறு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் மாநில தலைவர் பூபதி, பொதுச்செயலர் சுந்தர்ராஜ் ஆகியோர், தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்தில் அளித்துள்ள மனு: ஓட்டுச்சாவடியில், சட்டசபை தொகுதி எண் மற்றும் ஓட்டுச்சாவடி எண் ஆகியவை, பெயின்ட் வாயிலாக எழுதப்படுகிறது. ஓட்டுச்சாவடியில் இருந்து நான்கு புறமும் உள்ள அணுகு சாலைகளில், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் கோடுகள் வரைந்து, ஓட்டுச்சாவடி உள்ள திசை அம்புக்குறியாக காட்டப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அமர்வதற்கு தனி மேஜை, நாற்காலி அமைக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவு அலுவலர் அமர்வதற்கு நீளமான மேஜை மற்றும் சேர்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகளின் முகவர்கள் அமர்வதற்கு தனியாக நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பேட் உபகரணங்கள் வைப்பதற்கு அகலமான மேஜைகள் வாடகைக்கு ஏற்பாடு செய்யப் படுகிறது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு தனித்தனியே குடிநீர் வசதிகள் செய்யப்படுகின்றன. தற்காலிக மின் விளக்குகள் மற்றும் தற்காலிக மின் விசிறிகள் அமைக்கப் படுகின்றன. ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பேட் உபகரணங்கள் உள்ள இடத்தின் அருகில் தற்காலிக மின் விளக்குகள் அமைக்கப் படுகின்றன. இடநெருக்கடியை தடுக்கும் வகையில் ஓட்டுச்சாவடிகளில் ஆண், பெண் என தனித்தனி வரிசைக்கான தற்காலிக மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளை ஓட்டுச்சாவடிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வருகின்றனர். அதற்காக, வி.ஏ.ஓ.,க்களுக்கு தற்போது, 1,300 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை, 100 சதவீதமாக உயர்த்தி 2,600 ரூபாயாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.