உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதிர்ச்சியற்றவர் ஆதவ் அர்ஜூனா; மொத்தமாய் முடித்து வைத்த ரவிக்குமார்!

முதிர்ச்சியற்றவர் ஆதவ் அர்ஜூனா; மொத்தமாய் முடித்து வைத்த ரவிக்குமார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கருத்து முதிர்ச்சியற்றது' என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி.,யுமான ரவிக்குமார் கண்டித்துள்ளார்.

மாநாடு

தமிழகத்தில் டாஸ்மாக்கை அரசே நடத்துகிறது. தி.மு.க.,வின் கூட்டணியில் இருக்கும் கட்சியான விடுதலை சிறுத்தைகள் மது விற்பனையை எதிர்த்து மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு ஒன்றை வரும் 2ம் தேதி நடத்துகிறது. இந்த மாநாட்டுக்கு வருமாறு அ.தி.மு.க.,வுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்த நாள் முதல் இரு கட்சிகளில் உள்ளவர்கள் வெளியிடும் கருத்துகள் விவாதமாக மாறி இருக்கிறது.

40 ஆண்டு அரசியல்

லேட்டஸ்ட்டாக விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி அடுத்தக்கட்ட விவாதத்தை முன் எடுத்து வைத்தது. அந்த பேட்டியில் சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் என்ற பதவிக்கு வரும் போது 40 ஆண்டுகால அரசியலில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆக கூடாதா என்று கேள்வி எழுப்பினார்.

தி.மு.க., பதிலடி

விடுதலை சிறுத்தைகள் கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் தி.மு.க., ஜெயிக்க முடியாது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்ற ரீதியில் பல கருத்துகளை முன் வைத்தார். அவரின் இந்த பேச்சு, தி.மு.க., மேலிடத்தை கடும் கோபத்துக்கு ஆளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எம்.பி.,யும், தி.மு.க., துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா பதிலடி தந்துள்ளார். கொள்கை புரிதல் இல்லாமல் கூட்டணி அறத்துக்கு எதிராக பேசி உள்ளார், அவரிடம் அவரது கட்சியினரே விழிப்புடன் இருக்க வேண்டும் என்று விமர்சித்தார்.

கருத்து முரண்

இப்படி மது ஒழிப்பு மாநாடு என்ற பேச்சு முன் வைக்கப்பட்ட தருணத்தில் இருந்து தி.மு.க., வி.சி.க., இடையே கருத்து முரண்கள் ஏற்படவே இரு கட்சிகளின் தொண்டர்கள், தலைமை நிர்வாகிகள் இடையே குழப்பம் நிலவுவதாக கூறப்பட்டது. மேலும் ஆதவ் அர்ஜூனாவின் கருத்து திருமாவளவனின் ஒப்புதலோடு பெறப்பட்டதாக இருக்கும், அவரின் அனுமதி பெற்றே பகிரப்பட்டது என்ற தகவல்கள் முதல்வர் தரப்பிடம் சென்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகே ஆ.ராசாவிடம் இருந்து கடும் தாக்குதல் சொற்கள் வெளிப்பட்டதாக தெரிகிறது.

பயணம்

அதுமட்டும் அல்லாமல், விடுதலை சிறுத்தைகள், அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை உருவாக்க ஆதவ் அர்ஜூனா முயல்கிறார், அதை நோக்கிய பயணம் தான் இது என்றும் பேசப்பட்டது. இருகட்சிகள் இடையே இப்படி முரணான பேச்சுகள் எழுந்த வண்ணம் இருக்க, விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர், எம்.பி., ரவிக்குமார் பதில் கூறி உள்ளார்.

முதிர்ச்சியற்றது

இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது; தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கூட்டணி என்பது எண்ணிக்கையை அடிப்படையாக கொண்ட கூட்டணி அல்ல. அது கொள்கை கூட்டணி. விடுதலை சிறுத்தைகள் இல்லை என்றால் வட மாவட்டங்களில் தி.மு.க.,வால் வெல்ல முடியாது என்று ஆதவ் அர்ஜூனா கூறி இருப்பது உண்மைக்கு மாறானது. அரசியல் முதிர்ச்சியற்றது.

காரணம்

தேர்தலில் தி.மு.க., 40 தொகுதிகளிலும் வெல்ல விடுதலை சிறுத்தைகள் உதவியது. அதுபோல, விடுதலை சிறுத்தைகளுக்கு 2 எம்.பி.,க்கள், 4 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பது தி.மு.க., கூட்டணியால் தான் என்று கூறி உள்ளார்.

சந்தேகம்

ரவிக்குமாரின் பேச்சின் மூலம் ஆதவ் அர்ஜூனாவின் கருத்தை ஏற்கக் கூடாது என்பது தெளிவானாலும், அப்படியே இதே நிலை தொடருமா என்று பலரும் சந்தேகம் கிளப்புகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., என அனைத்து கட்சிகளும் 2026ம் ஆண்டு தேர்தல் பணிகளை முன் வைத்து செயல்பாட்டில் இறங்கி உள்ளன. மற்ற கட்சிகளும் அப்படியே, அதற்கான உதாரணம் தான் விடுதலை சிறுத்தைகள், தி.மு.க., முரண்.

விதிவிலக்கு

தேர்தலின் போது தான் எந்த கட்சி யாருடன் கூட்டணி, என்ன நிலைப்பாடு என்பதெல்லாம் இறுதியாகும். அதுவரை இப்படியான காட்சிகளை காணலாம். ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிகள் மாறும், 2026 தேர்தலும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்கின்றனர் நடப்பதை உன்னிப்பாக கவனிக்கும் அரசியல் விமர்சகர்கள்.

ஆதவ் அர்ஜூனா யார்

ஆதவ் அர்ஜூனா, பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். லோக்சபா தேர்தலுக்கு சில காலம் முன்னதாக தான் இவர், வி.சி.க.,வில் இணைந்தார். கட்சியின் செலவுக்கு பெருமளவு பண உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார் என்றும் பேச்சு உண்டு.திடீரென வந்து கட்சியில் சேர்ந்தவருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி அளித்ததும், அந்த பேச்சு இன்னும் வலுவானது. இத்தகைய சூழலில் தான், அவர் தி.மு.க., கூட்டணிக்கு வேட்டு வைக்கும் வகையில் பேசியிருக்கிறார். இதற்கெல்லாம் தலைமை கொடுக்கும் இடம் தான் காரணம் என்று வி.சி.க., தொண்டர்கள் மத்தியிலும் கருத்து நிலவுகிறது.வி.சி.க.,வில் சேருவதற்கு முன்னதாக, தி.மு.க., முக்கியஸ்தர்களுடன் ஆதவ் அர்ஜூனா நெருக்கம் காட்டி வந்ததும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Subramanian Srinivasan
செப் 25, 2024 19:03

தரும் வாயை மூடிக் கொண்டிருப்பதால் அவருக்கு சம்மதம் எனத் தெரிகிறது இப்பேச்சு.அரஜூன் பணத்திற்கு அவர் அடங்கிப்போய்விட்டாரோ? திருமா "மக்கள் நலக் கூட்டணி தந்த பாடத்தை மறந்துவிட்டார்.எவ்வளவுதான் பேசினாலும் மற்றொரு பாமக தான் விசிக.சாதி சார் கட்சிதான்.


Raajanna
செப் 25, 2024 14:32

சம்பாதித்தால் அல்ல, கொள்ளை என்பதே சரி.


ADVOCATE DALIT PRAVINA G MBBS BL
செப் 25, 2024 13:33

ஸ்டாலின் ரிசைன் வழக்கறிஞர் தலித் கோ பிரவீணா MBBS BL ஆல் இண்டியா தலித் சமாஜ் மற்றும் தமிழ் முன்னேற்ற கழகம்


வைகுண்டேஸ்வரன்
செப் 25, 2024 12:17

இனி பிஜேபி காரர்கள், ஆதவ் அர்ஜுனுக்கு காவடி எடுத்து திருமா வுக்கு கொம்பு சீவி விட்டு சுகம் காணுவார்கள். நல்ல சுவாரசியம்.


sankar
செப் 25, 2024 13:56

அப்படி எந்த அவசியமும் பிஜேபிக்கு இல்லை - உன்னைப்போல மண்டூகங்கள் புரியாமல் உளறிக்கொண்டே இருங்கள்


மாயவரத்தான்
செப் 25, 2024 11:14

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்காவிட்டாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரே ஒரு அமைச்சர் பதவியாவது கொடுப்பதுதான் திமுக பேசக்கூடிய சமூக நீதிக்கு சரியாக இருக்கும் என்பதுதான் அப்பட்டமான உண்மை.


Dhananjayan dhananjayan
செப் 24, 2024 19:30

அவர், அவர் உரிமையை கேட்டார்.தப்பே இல்லை


ஆரூர் ரங்
செப் 24, 2024 18:59

திமுக எப்போதாவது நிதி, பொதுப்பணித்துறை, வருவாய் போன்ற முக்கிய துறைகளை தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தந்த வரலாறுண்டா?. கிடையவே கிடையாது. அவர்கள் முதுகில் சவாரி செய்து ஆட்சியைப் பிடித்து பிறகு அவர்களையே கொத்தடிமைகளாக வைத்திருக்கும் எண்ணமோ.


theruvasagan
செப் 24, 2024 16:11

இந்த சலசலப்புகளுக்கு பதவி ஆசை மட்டும் காரணமா இருக்க முடியாது. தகுதியில்லாததுக்கு பதவி என்ற பேச்சு எழும் போதுதான் இந்த மாதிரி எதிர்ப்புக் குரல் ஒலிக்கும்.


theruvasagan
செப் 24, 2024 16:06

கூட்டணி கட்சிகளில் உள்ள அத்தனையுமே முதுகெலும்பே இல்லாத உயிரினங்கள் என்றுதான் நினைச்சிருந்தோம். ஆனா அங்கொண்ணு இங்கொண்ணா தன்மானம் இருக்கிற ஜீவராசிகளும் இருக்குது போல.


theruvasagan
செப் 24, 2024 16:01

அப்படி.போடு அருவாள. நாமெல்லாம் கூட்டாளிங்கன்னு தேனொழுக சொல்லுவானுக. ஆனால் நீங்கள்ளாம் பல்லாக்கு தூக்குங்க. நாங்க அதுல உக்காந்து பவனி வருவோம். இதுதான் கூட்டணி தர்மமா. கூட்டணி பல்லாக்கை ஒருத்தன் எத்தனை நாள்தான் தூக்குறது. ஒரு தடைவையாவது உக்காந்து போகணும் என்கிற என்கிற ஆசை வரக்கூடாதா.


சமீபத்திய செய்தி