உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026 தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் கட்சியால் மும்முனை போட்டி

2026 தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் கட்சியால் மும்முனை போட்டி

திருப்பத்துார்:''விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதால் வரும், 2026 சட்டசபை தேர்தலில், மும்முனை போட்டிக்கு வாய்ப்புள்ளது,'' என, மாநில காங்., கட்சி முன்னாள் தலைவர் அழகிரி கூறினார். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, காங்., சார்பில் நடந்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மோடி அரசு நடத்துகின்ற வாக்கு திருட்டு மற்றும் அதற்கு துணை போகும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து, இந்தியா முழுவதும், காங்., போராடி வருகிறது. பீஹாரில், 55 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குரிமை இல்லை என தேர்தல் ஆணையம் சொல்கிறது. கடந்த தேர்தலில், ஓட்டு போட்ட, 55 லட்சம் வாக்காளர்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு உள்ளது. அந்த மக்களின் கேள்விக்கு பதில் இல்லாததால், ராகுல் அங்கு மக்களை சந்தித்து, பிற மாநில தலைவர்களையும் சேர்த்து, பீஹாரில் போராட்டம் நடத்தினார். ஆனாலும் இன்னும் தேர்தல் ஆணையத்திடமிருந்து, இது குறித்து தெளிவான பதில் இல்லை. கள்ளக்குறிச்சியில் நடந்தது தவறு. அதை முதல்வர் நியாயப்படுத்தவில்லை. தமிழகத்தில், பாலியல் குற்றங்கள் நடப்பது இல்லை என கூறவில்லை. பாலியல் குற்றங்கள் செய்பவர் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். பாலியல் குற்றங்கள் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதைவிட, ஆளுங்கட்சி தண்டிக்கப்பட வேண்டும் என, சில எதிர்க்கட்சிகள் மும்முரமாக இருக்கின்றனர். பாலியல் குற்றங்களுக்கு சமூக சூழலும் ஒரு காரணம். பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே ஒரு சுற்றுப்பயணம் செய்து பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. இப்போது அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்ன ஆகிவிடப் போகிறது. விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதால், வரும், 2026 தேர்தல், மும்முனை போட்டியாக மாற வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !