உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிவாரணம் கிடைக்காத கிராம மக்கள் மறியல்; செஞ்சி - தி.மலை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

நிவாரணம் கிடைக்காத கிராம மக்கள் மறியல்; செஞ்சி - தி.மலை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

செஞ்சி; செஞ்சி, மயிலம் தொகுதியில் வெள்ள நிவாரணம் கிடைக்காததால் பொதுமக்கள் பல இடங்களிலும் சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போலீசாரும், வருவாய் துறையினரும் திணறி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 2000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து நிவாரணம் வழங்க கணக்கெடுக்கும் பணி நடந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி பகுதி, மேல்மலையனுார் தாலுகாவில் சொக்கனந்தல், வடபாலை, தென்பாலை, கலத்தம்பட்டு, சிறுவாடி, மேலச்சேரி, செவலபுரை, கடலி, நீலம்பூண்டி உட்பட பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்த கிராமங்கள் ஒன்றை கூட நிவாரணம் வழங்க தேர்வு செய்யவில்லை. செஞ்சி தாலுகாவில் மழை வெள்ளம் சூழ்ந்த பல கிராமங்கள் பட்டியலில் விடுபட்டுள்ளன. இதனால் கடந்த 5ம் தேதி மேலச்சேரி கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர். நேற்று முன்தினம் சோமசமுத்திரம் கிராம மக்கள் ரேஷன் கடையை பூட்டினர். நேற்று மேல்மலையனுார் தாலுகாவை சேர்ந்த சொக்கனந்தல், வடபாலை, தென்பாலை, கலத்தம்பட்டு கிராம மக்கள் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் சத்தியமங்கலம் - சொக்கனந்தல் கூட்ரோட்டில் காலை 9:50 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.செஞ்சி டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா, தாசில்தார்கள் செஞ்சி ஏழுமலை, மேல்மலையனுார் தனலட்சுமி ஆகியோரின் சமாதானங்களை அவர்கள் ஏற்கவில்லை. இதனால் 7 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து 11.30 மணிக்கு வந்த திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம் பேச்சு வார்த்தை நடத்தி, 5 நாட்களில் நிவாரண தொகை வழங்குவதாக உறுதியளித்தார். இதையடுத்து 11.50 மணிக்கு மறியலை கைவிட்டனர். இதேபோல், செஞ்சி -திண்டிவனம் சாலையில் ராஜாம்புலியூர் டோல்கேட் அருகே 12.30 மணிக்கு நுாற்றுக்கும் மேற்பட்டோர் மறியல் செய்தனர். செஞ்சி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜன் சமாதானம் செய்து மறியலை கைவிட செய்தார். அடுத்தடுத்து நடக்கும் சாலை மறியல் மற்றும் போராட்டங்களால் போலீசாரும், வருவாய்த் துறையினரும் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Prasad VV
டிச 10, 2024 08:28

சாலை மறியல் மற்றும் போராட்டங்களால் போலீசாரும், வருவாய்த் துறையினரும் திணறி வருகின்றனர்.


முக்கிய வீடியோ