சென்னை: கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 78 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், மூன்றாம் நாளான நேற்று, கடலூர் கடலில் கரைக்க, மார்க்கெட் கமிட்டி முன் ஊர்வலம் துவங்கியது. பஸ் நிலையம் முன் விநாயகர் சிலைகளுக்கு, இஸ்லாமியர்கள் சார்பில், அவுலியா தர்கா டிரஸ்டி யாசீன், பாபு, தே.மு.தி.க., நகர செயலர் அக்பர் அலி உள்ளிட்டோர், இனிப்பு கொடுத்து வரவேற்பு அளித்தனர்.திண்டுக்கல்: குடைப்பாறைப்பட்டி விநாயகர் சிலை ஊர்வலம், ஆண்டுதோறும் பள்ளிவாசல் வழி செல்லும். பள்ளிவாசல் முன், இசைக்கருவிகள் ஒலிக்க, எதிர்ப்பு தெரிவிப்பதால், ஊர்வலத்தை புறக்கணிப்பதாக, குடைப்பாறைபட்டி மக்கள் அறிவித்தனர். கோவை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், மேற்கு மண்டலம் முழுவதும் 5,804 சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டன. கடந்த மூன்று நாட்களாக, விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள சிலைகள், வரும் 11ம் தேதி வரை, அடுத்தடுத்து விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. இதையொட்டி, மேற்கு மண்டலம் முழுவதும், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.