உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை ஒப்பந்ததாரரிடம் ரூ.5 கோடி மோசடி விருதுநகர் அ.தி.மு.க., பிரமுகர்கள் கைது

மதுரை ஒப்பந்ததாரரிடம் ரூ.5 கோடி மோசடி விருதுநகர் அ.தி.மு.க., பிரமுகர்கள் கைது

மதுரை:மதுரையில் அரசு ஒப்பந்த பணிகளை செய்து முடித்ததற்கான தொகையை, போலி பில் மூலம் அரசிடம் இருந்து பெற்றும், ஒப்பந்ததாரருக்கு, 5.4 கோடி ரூபாய் தராமல் மோசடி செய்ததாக, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர், அவரது மாமனாரான எம்.ஜி.ஆர்., மன்ற துணைச்செயலர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். டெண்டர் மதுரை, தனக்கன்குளத்தை சேர்ந்தவர் பழனிகுமார், 60; அரசு ஒப்பந்ததாரர். தொழில் வளர்ச்சிக்காக விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அ.தி.மு.க., முன்னாள் நகர் செயலரும், தற்போது விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலருமான சக்திவேல், 65, என்பவரை அணுகினார். இவர்கள், தங்களுக்குள் 'டீலிங்' செய்துக்கொண்டு 2017 -- 2022 வரை சக்திவேல் பெயரில் டெண்டர் எடுத்து, பணிகளை பழனிகுமார் செய்து கொடுத்தார். இது அரசு அதிகாரி களுக்கும் தெரிந்தே நடந்துள்ளது. பணிகளை சக்திவேலிடம் வட்டிக்கு கடன் வாங்கி செய்து கொடுத்தார். பணி முடிந்ததும் அதற்கான தொகை, கடனுக்கான வட்டி, அசலை கழித்துக்கொண்டு பழனிகுமாருக்கு சக்திவேல் தரப்பு பணம் கொடுத்தது. இப்படி பழனி குமாருக்கு, 3 கோடியே 19 லட்சத்து 80,000 ரூபாய் கொடுக்கப்பட்டது. மீதித்தொகை, 5 கோடியே 4 லட்சத்து 20,755 ரூபாயை தருவதாக சக்திவேல் உறுதியளித்தார். புகார் இந்த தொகையில் பழனிகுமாருக்கு தந்த கடனுக்கான வட்டியாக 5 சதவீதத்தை கழித்துக்கொண்டார். ஆனால், பாக்கித்தொகையை தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார். ஒப்பந்த பணிகளுக்கான பில் தொகையை தனக்கு 'செட்டில்' செய்யுமாறு மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறை அதிகாரிகளிடம் பழனிகுமார் கேட்டபோது, சக்திவேல் போலி பில்களை கொடுத்து பணத்தை பெற்றது தெரிந்தது. இதற்கு உடந்தையாக அவரது மருமகன் கருப்ப சாமி, ராஜலட்சுமி, சதீஷ், டிரைவர் சங்கர் ஆகியோர் இருந்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் பழனிகுமார் புகார் செய்தார். மோசடி, கூட்டுசதி உட்பட 5 பிரிவுகளிலும், கந்துவட்டி தடுப்புச்சட்டத்திலும் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சக்திவேல், கருப்பசாமி, 40, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில், கருப்பசாமி விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலராக உள்ளார். இவரது மனைவி ராமதிலகம், அருப்புக்கோட்டை நகராட்சி 32வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை