உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது உனக்கு, அது எனக்கு! முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் வாழைத்தார்களை அள்ளிய மக்கள்

இது உனக்கு, அது எனக்கு! முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் வாழைத்தார்களை அள்ளிய மக்கள்

விருதுநகர்; விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி முடிந்தவுடன், வரவேற்புக்காக வைத்திருந்த ஏராளமான வாழைத்தார்களை மக்கள் அள்ளிச் சென்றனர்.தமிழகம் முழுவதும் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மக்கள் குறைகளையும் அவர் கேட்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் சிவகாசி சென்றார். பின்னர் 2வது நாளாக விருதுநகரில் புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார். 57,556 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந் நிகழ்ச்சியின் போது முதல்வர் ஸ்டாலினை வரவேற்க நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், குலைதள்ளிய தார்களுடன் வைக்கப்பட்டு இருந்தன. இருபுறமும் வரிசையாக கட்டி வைக்கப்பட்டு இருந்த வாழைமரங்களில் இருந்த தார்கள் பார்க்க மிகவும் அழகாக காட்சியளித்தது.நிகழ்ச்சி முடிந்து முதல்வர் ஸ்டாலின் சென்ற பிறகு, பெண்கள் உள்ளிட்ட பலரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்படி சென்ற அவர்களின் பார்வை வரிசையாக கட்டி வைக்கப்பட்டு இருந்த வாழைமரங்கள் மீது திரும்பியது. என்ன செய்யலாம் என்று ஒரு கணம் யோசித்த அவர்கள் அடுத்து செய்தது தான் அட்ரா சக்கை ரகம்.கையில் சிறு, சிறு கத்திகளுடன் களம் இறங்கிய பெண்கள், வாழைமரங்களில் இருந்த தார்களை பதம் பார்த்தனர். தங்களுக்கு பிடித்தமான வாழைத்தார்களை அள்ள ஆரம்பித்தனர். சிலர் பைகளில் எடுத்துச் சென்றனர். சிலர் மூட்டையாக கட்டிக் கொண்டு தலையில் சுமந்தபடி அங்கிருந்து நகர்ந்தனர்.இன்னும் சிலர் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தபடி, தாங்கள் கொண்டு வந்திருந்த இருசக்கர வாகனங்களில் மூட்டையாக கட்டி அனுப்பி வைத்தனர். அதிக எடை கொண்டதாக உள்ளதே என்று யோசித்த ஒரு பிரிவினர், தார்களில் இருந்த வாழைக்காய்களை தனித்தனியாக அறுத்து தாங்கள் கொண்டு வந்த பைகளில் இட்டுச் சென்றனர்.வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் இத்தகைய செயல்களை செய்வது உண்டு. இன்று முதல்வர் பங்கேற்க நிகழ்ச்சி என்பதால் கூடுதல் உற்சாகத்துடன் வாழைத்தார்களை அள்ளி அனைவரையும் அட... என்று சொல்ல வைத்தனர். வாழைத்தார்களை வாகாக அள்ளி, தலையில் மூடையாக சுமந்து வாய்களில் சிரிப்புடன் நடையை கட்டிய பெண்களின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரை கவர்ந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

adalarasan
நவ 10, 2024 22:21

இது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நடை பெறுகிறது.இதற்காகவே சிலர் வருகிறார்கள். நம் நாட்டின் நிலைமை அப்படி என்ன செய்வது ?


Ramesh Sargam
நவ 10, 2024 20:13

நமது மக்களை திருத்தவே முடியாது.


சமீபத்திய செய்தி