போர் பதற்றம்: விமான சேவை பாதிப்பு
சென்னை:இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக, நம் நாட்டிலிருந்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்ட போரின் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் இரவு கத்தார் நாட்டில் இருந்த அமெரிக்க ராணுவ தளங்கள் மீது, ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.இதன் காரணமாக, மத்திய கிழக்கில் உள்ள நாடுகளின் வான்வழிப் பகுதிகள் நேற்றுமுன்தினம் முதல் மூடப்பட்டன. இதன் காரணமாக, உலகம் முழுதும் பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கத்தார் நாட்டை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும், கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.சென்னையில் இருந்து, குவைத், அபுதாபி, தோஹா ஆகிய நகரங்களுக்கு புறப்படும், இண்டிகோ நிறுவனத்தின் ஆறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல், சென்னைக்கு வர வேண்டிய கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், தோஹா விமானம்; குவைத், அபுதாபியில் இருந்து வரும், இண்டிகோ விமானங்கள்; குவைத்தில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம் என, ஐந்து வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல், திருச்சியில் இருந்து துபாய், சார்ஜா நகரங்களுக்கு இயக்கப்படும், நான்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நேற்று 17 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்தியாவில் இருந்து, சிங்கப்பூர், லண்டன், பஹ்ரைன் செல்ல வேண்டிய விமான சேவையில் தாமதம் ஏற்பட்டது.மத்திய கிழக்கு நாடுகளில் நிலைமை சீரானதும், விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என, இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.