உசிலம்பட்டி கால்வாய்க்கு தண்ணீர்: தினகரன்
சென்னை:'உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு, வைகை அணையில் இருந்து, நிரந்தரமாக தண்ணீர் திறப்பதற்கான அரசாணையை, தமிழக அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: வைகை அணையில் இருந்து, உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு, தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், வணிகர்கள், வழக்கறிஞர்கள் என, ஒட்டுமொத்த மக்களும், ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்கள், கால் நுாற்றாண்டு காலம் போராடி பெற்ற, 58 கால்வாய் திட்டத்தின் கீழ், வைகை அணையில் இருந்து, உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததால், ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் சரிந்து, குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 70 அடியாக உயர்ந்தால் மட்டுமே, 58 கால்வாய் மதகு பகுதியை திறக்க முடியும் என்ற நீர்வளத்துறை அதிகாரிகள் உத்தரவால், ஒவ்வொரு ஆண்டும் தங்களுக்கு தேவையான தண்ணீரைப் பெற, பெரும் போராட்டம் நடத்த வேண்டி உள்ளது என, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, உசிலம்பட்டி விவசாயிகளின் பாசன வசதிக்காகவும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், வைகை அணையில் இருந்து, உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். ஆண்டுதோறும் உரிய நேரத்தில், தண்ணீர் திறப்பதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.